Header Ads

மனக்குழப்பமும் அச்சமும் மக்களுக்குத் தேவையில்லை

பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்துமே இறுதிக் கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வேட்பாளர்கள் பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளனர். பொதுத் தேர்தலில் ஏராளமான கட்சிகளும், பெருந்தொகையான வேட்பாளர்களும் போட்டியிடுவதனால் தேர்தல் களம் பரபரப்பு நிறைந்ததாகவே காணப்படுகின்றது.

ஆனாலும் மக்கள் கூட்டம் நிறைந்த பொதுக் கூட்டங்களோ, வீடுவீடாக கூட்டமாகச் சென்று ஆதரவு தேடும் வழமையான நடைமுறைகளோ இம்முறை கிடையாது. மக்கள் ஆதரவைத் தேடும் அனைத்து வகையான முயற்சிகளும் இம்முறை அமைதியான முறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் பரப்புரைகளும், வாக்கு வேட்டைகளும் இன்று அமைதியான முறையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலும் ஊடகங்கள் வாயிலாகவே பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மற்றொரு புறத்தில் சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சுகள் பகிரப்படுகின்றன. சில இணையத்தளங்களும் ஊடக தர்மங்களை மறந்தபடி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர் சிலரை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்தபடி சில இணையத் தளங்கள் ஒவ்வாத செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேசமயம் தங்களுக்குப் பிடித்தமான வேட்பாளர்களுக்குத் துதி பாடுகின்ற செய்திகளையும் கட்டுரைகளையும் அந்த இணையத் தளங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டபடி உள்ளன. இணையத் தளங்களின் தனிப்பட்ட தாக்குதல்களை சமாளித்துக் கொள்வதற்காக வேட்பாளர்கள் படுகின்ற சிரமமும் புரிகின்றது.

உண்மையில் இது ஊடக தர்மம் அல்ல. இணையத் தளங்கள்தான் இவ்வாறான மீறல்களில் அதிகம் ஈடுபடுவதைக் காண முடிகின்றது. பக்கச் சார்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற இணையத் தளங்களே அதிகம் உள்ளன. நமது நாட்டில் தமிழில் மாத்திரமன்றி சிங்களத்திலும் இவ்வாறான இணையத் தளங்கள் நிறையவே இயங்குகின்றன. அரசியல் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் பொறுத்த வரை துதிபாடுவதும், சேறு பூசுவதுமே இவற்றின் போக்குகளாக உள்ளன.

ஆனாலும் மக்கள் இன்று அதிகம் தெளிவடைந்து விட்டார்கள். அரசியல் நிலைவரங்களை மாத்திரமன்றி ஊடகங்களையும் அலசி ஆராய்ந்து விமர்சிக்கின்ற தெளிவும் ஞானமும் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி ஆகும். எனவே ஊடகங்களின் தவறான பரப்புரைகளால் மக்கள் மத்தியில் பாரிய தாக்கம் ஏற்பட்டு விடுமெனக் கூறுவதற்கில்லை. அவர்கள் அனைத்தையும் அவதானித்து நிதானமாகவே நிலைப்பாட்டுக்கு வருவர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கொரோனா அச்சுறுத்தல் உலகில் இன்னுமே முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாத இந்நிலையில், இலங்கையில் நடைபெறப் போகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் எவ்வாறானதாக அமையுமென்ற இயல்பான எதிர்பார்ப்பு பலருக்கும் உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமா என்றுதான் பலரும் சிந்திக்கின்றார்கள்.

மக்களில் அதிகமானோர் வாக்களிக்கச் செல்வதில் ஆர்வம் செலுத்துவரா? இதன் காரணமாக வாக்களிப்பு வீதம் குறைவடையும் வாய்ப்பு உள்ளதா என்றெல்லாம் பலரும் சிந்திக்கின்றார்கள். அதேசமயம், பொதுத் தேர்தலை தவிர்க்க விரும்பிய எதிரணியினரும் இவ்வாறான அச்சத்தை திட்டமிட்டபடி மக்களுக்கு ஊட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனாலும் இவ்வாறானதொரு குழப்ப மனோநிலையும் பீதியும் அவசியமில்லையென்பதே சுகாதாரத் துறையினரின் கருத்தாக இருக்கின்றது. பொதுத் தேர்தல் வாக்களிப்பு இம்முறை எவ்வாறு நடத்தப்படுமென்பதை தேர்தல் ஆணைக்குழு மிகத் தெளிவாகவே மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளது. அதாவது கொரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை உரியபடி பேணியவாறு வாக்களிப்பை நிறைவாக நடத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை பற்றிய அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக இடைவெளியைப் பேணியபடி, நோய்த் தொற்றுக்கு இடமளிக்காதபடி வாக்களிப்பை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. எனவே வீணான அச்சம் மக்களுக்கு அவசியமில்லை என்பதே பொதுவான கருத்தாகும்.

உலகில் கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற வேளையில் தேர்தலை பாதுகாப்பாக நடத்தி முடித்திருக்கும் உலக நாடுகள் இரண்டை இதற்கான உதாரணங்களாக எடுத்துக் காட்ட முடியும். தென்கொரியாவும் சிங்கப்பூருமே அவ்விரு நாடுகளாகும். அந்நாடுகளில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று எமது நாட்டிலும் பொதுத்தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்படுமென்பதில் மக்கள் வீணான சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டியதே இங்கு மக்களின் கடமையாகும். 

Tue, 07/28/2020 - 08:30


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.