கடற்படை தளபதியின் தலைமையில் பாரிய போதைப் பொருள் கடத்தல்கள் முறியடிப்பு

பிரியாவிடை நிகழ்வில் பாதுகாப்பு செயலர் புகழாரம் 

இலங்கை கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் கடற்பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்க முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரட்ண தெரிவித்தார். 

கடற்பிராந்தியத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க கரையிலிருந்து வெகு தொலைவில் கப்பல்களை அனுப்பும் செயற்திட்டத்தை ஆரம்பித்த கடற்படைத் தளபதி அட்மிரல் டி சில்வாவின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் இப்பிராந்தியங்களில் இடம்பெறும் சகல போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளையும் முறியடிக்க முடிந்ததுடன், அவரின் வழிகாட்டலின்றி இதனை முன்னெடுப்பதானது ஒரு கனவாகவே அமைந்திருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கையின் 23ஆவது கடற்படைத் தளபதியாக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விஷேட பிரியாவிடை இடம்பெற்றது.  

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த பிரியாவிடை வைபவத்தில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். முன்மாதிரியான தளபதியாக திகழ்ந்த இவர் முக்கியமான காலகட்டத்தில் கடற்படையை சரியான திசையை நோக்கி வழிநடத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கையின் முதல் கடல்சார் கோட்பாட்டை உருவாக்குதல், சுழியோடல் தளங்களான காலி மற்றும் திருகோணமலையில் கடலுக்கடியில் அருங்காட்சியகங்கள் அமைத்தல் மற்றும் படகு கட்டும் தள வசதிகள், 20 மீட்டர் நீளமான ரோந்து படகுகள் உற்பத்தி போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளை நோக்கி அவர் கடற்படையை வழிநடத்தினார். மேலும், கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அட்மிரல் டி சில்வா தலைமையிலான இலங்கை கடற்படை வழங்கிய பங்களிப்பையும் பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார். 

இலங்கை கடற்படையினர் மத்தியில் வைரஸ் மேலும் பரவலடைவதை கட்டுப்படுத்த அவரால் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும். ஒரு வலுவான கடற்படை தளபதியாக தங்களது உறுதிப்பாட்டிற்கு நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். 

இராணுவ வாழ்விலிருந்து வெளியேறுபவர்களுக்கு பிரியாவிடையளிப்பது மரபு ரீதியாக இராணுவத்தால் பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். அதனை பாதுகாப்பு அமைச்சு இன்று முதல் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய 36 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்கு முன்மாதிரியான சேவை வழங்கிய சிறந்த கடற்படை அதிகாரியான அட்மிரல் டி சில்வாவுக்கு பிரியாவிடையளிக்கபடுவதாகவும் தெரிவித்தார். 

அட்மிரல் டி சில்வா, 2019 ஜனவரி 1முதலாம் திகதியன்று கடற்படையின் 23ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் ஒரு திறமையான சுழியோடி ஆவார், அவர் பல ஆண்டுகளாக சுழியோடல் நிபுணர்களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். 

கடந்த ஆண்டு இடம்பெற்ற மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலையடுத்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தை விரைவாக புனரமைப்பபதில் கடற்படைத் தளபதியும் ஒரு முக்கிய பங்கு வகித்தார். 

இந்த வைபவத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டி சில்வா, பாதுகாப்பு செயலாளர், சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது நன்றி தெரிவித்தார். தான் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்வதற்கு உயர் மட்ட அதிகாரிகளிடம் இருந்து வழங்கப்பட்ட தலைமைத்துவம் முக்கியமானதாக அமைந்திருந்தது என குறிப்பிட்டார். 

தான் கடற்படை பயிலுனர் அதிகாரியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், பயிற்சியின் போது தனது சகாக்களுடன் ஒப்பிடும்போது தன்னிடம் குறைந்த தகைமைகள் காணப்பட்டபோதிலும் தான் எப்போதும் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்ததாகவும், அந்த அனுபவம் தனது வாழ்க்கைக்கு உறுதுணையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். 

கொழும்பு துறைமுகம் , பேர வாவி மற்றும் அதன் சுற்றுச்சூழலை ஒரு சுற்றுலா தளமாக மாற்றி அவற்றினூடாக நாட்டின் திறைசேரிக்கு பங்களிக்கும் செய்யும் செயற்றிட்டம் தொடர்பான கருத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.. 

இந்த நிகழ்வினை நினைவுகூறும் வகையில், பிரியாவிடை பெரும் கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்னவினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் சிறப்பான சேவையாற்றிய கடற்படை சேவா வனிதா பிரிவுத் தலைவி அருந்ததி ஜெயநெத்திக்கு விஷேட நினைவு சின்னமும் கையளிக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரி, இராணுவத் தளபதியும் அவரின் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன், விமானப்படைத் தளபதியும் அவரது பாரியார் திருமதி பிரபாவி டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் அவரின் பாரியார் திருமதி பிரியங்கி விக்ரமரத்ன, அமைச்சின் மேலதி செயலாளர்கள் , தேசிய புலனாய்வு தலைவர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாதிக் ஷிஹான் 

Wed, 07/15/2020 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை