சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்ற அமர்வு

ஆலோசனைகள் வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் குழுவை அனுப்ப தீர்மானம்

பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கூடும்போது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்த கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்க சுகாதார அமைச்சின் குழுவொன்றை பாராளுமன்றத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க விருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.  

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவெல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினரை (06) முற்பகல் சுகாதார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.  

பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் விரைவில் பாராளுமன்றம் கூடவிருப்பதால், புதிய பாராளுமன்ற செயற்பாடுகளை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெறும் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெறுவதால் அன்று சகலரும் சபையில் இருப்பது அவசியமாகின்றது.

இதன் பின்னர் அடுத்த அமர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பதை பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க முடியும் என்றார்.  

இதற்கமைய முதலாவது பாராளுமன்ற அமர்விலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பான முறையில் செயற்படவேண்டும் என்பதால், சுகாதார அதிகாரிகளிடமிருந்து உரிய ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமூக இடைவெளியைப் பேணுவதற்கும், கைகளைக் கழுவுவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், கூட்டங்கள் அனைத்தும் ஒன்லைன் முறையைப் பயன்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றன.  

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிடுகையில், இதுவரையில் நாட்டுக்குள் கொவிட் 19 வைரஸ் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளபோதும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் நபர்களின் ஊடாக வைரஸ் பரவக்கூடிய ஆபத்து இருப்பதால் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும் என்றார்.  

எனவே, எதிர்வரும் நாட்களில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை மண்டபம், குழு அறைகள், உணவுச் சாலை உள்ளிட்ட ஏனைய பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் உரிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

கொவிட் 19 சூழலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய புத்தகங்களும் இச்சந்திப்பின் போது பாராளுமன்றத்துக்குக் கையளிக்கப்பட்டன. 

Tue, 07/07/2020 - 05:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை