சீன துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருக்கும் சீன துணைத் தூதரகத்தை நாளை வெள்ளிக்கிழமைக்குள் மூடும்படி உத்தரவிட்டிருப்பது ஆத்திரத்தை தூண்டும் செயல் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.  

அமெரிக்கர்களின் புலமைச் சொத்தை பாதுகாப்பதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தூதரக வளாகத்தில் ஆவணங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் இது “மூர்க்கத்தனமானது மற்றும் நியாயமற்றது” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இது சர்வதேச சட்டத்தையும் இரு தரப்பிலான தூதரக ஒப்பந்தங்களையும் கடுமையாக மீறும் செயல் எனவும் தெரிவித்த அவர், இந்த நியாயமற்ற நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டார். 

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அண்மைக்காலத்தில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தகம், கொரோனா பெருந்தொற்று, அதேபோன்று ஹொங்கொங்கில் சீனா கொண்டுவந்திருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் சீனாவோடு மோதல் போக்கை கையாண்டு வருகிறது.  

இந்நிலையில் சீன உதவியுடன் ஊடுருவிகள் கொவிட்–19 தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை மேம்படுத்தும் ஆய்வுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க நீதித் திணைக்களம் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Thu, 07/23/2020 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை