நல்லூர் உற்சவம் சிறப்பாக நடைபெற பிரதமர் ஏற்பாடு

- ஆலய தர்மகர்த்தா ஷான் குமாரதாஸ் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடியதன் எதிரொலி
- இராணுவத் தளபதி, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பிரதமர் அவசர உத்தரவு
- உற்சவம் 24 ஆம் திகதி ஆரம்பம் 
- 50 பேர் எனும் கட்டுப்பாடு இல்லை 
- சமூக இடைவெளியை பின்பற்ற ஆலோசனை

நல்லூர் உற்சவத்தின்போது விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவிட்டுள்ளார்.கோவில் தர்மகர்த்தா ஷான் குமாரதாஸ், நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். நல்லூர் உற்சவத்தின்போது 50 பேர் மட்டும்தான் கலந்துகொள்ளலாம் எனக் கட்டுப்பாடு எதனையும் விதிக்காமல், வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளியைப் பேணி – இடையூறுகள் இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  

வரலாற்றுப் பெருமை மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கோவில் தர்மகர்த்தா ஷான் குமாரதாஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நேற்றுக் காலை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு அதற்கான ஏற்பாடுகளில் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகள் குறித்துப் உரையாடியுள்ளார்.  

குறிப்பாக 50 பேர் மட்டுமே கோவில் வளாகத்துக்குள் செல்லலாம் என்ற கட்டுப்பாடு பக்தர்களைப் பெரிதும் பாதிக்குமென பிரதமருக்குத் தெரிவித்த அவர், வழமையாக பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு வருவதையும் சுட்டிக்காட்டினார்.   இது தொடர்பாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிரதமர், உடனடியாகவே கொரோனா ஒழிப்பு செயலணிக்குத் தலைமைதாங்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரைத் தொடர்புகொண்டு இது குறித்து ஆலோசனை நடத்தியதுடன் முக்கிமான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தார்.  

திருவிழா நடைபெறும் நாட்களில் 50 பேர் என்று கட்டுப்படுத்தாமல், சமூக இடைவெளியையும், சுகாதார நடைமுறைகளையும் பேணக்கூடிய வகையில் வரக்கூடிய பக்கர்கள் இடையூறு இல்லாமல் வழிபடுவதற்கு தேவையான பொறிமுறை ஒன்றை வகுக்குமாறு அவர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.  

இதன் மூலம் அதிக எண்ணிக்கையானவர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Sun, 07/19/2020 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை