பண மோசடி குற்றச்சாட்டு; கைதான ஐவரும் தடுப்பில்

இணையவழி ஊடான கடன் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் என்று பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேரையும், 03 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சந்தேகநபர்களை நேற்று (27) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இணையவழி ஊடான கடன் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் என்று கூறி, அவர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, இந்நாட்டிலுள்ள அவர்களுடைய வங்கிக் கணக்குகளை பெற்று, அதில் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 500,000 ரூபாவை மோசடியாக பெற்றுள்ளதாக, பெண் ஒருவர், கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் பிட்டபெத்தர, நாரஹேன்பிட்டி, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டனர்.

அதேயிடங்களைச் சேர்ந்த30, 39, 38, 46 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இச்சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்கள் போலி ஆவணங்கள் மற்றும் போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மடிக்கணினி, வங்கிஅட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் லெமினெட்டிங் இயந்திரம், சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படும் 925 அட்டைகள், 02 போலி இறப்பர் முத்திரைகள், போலியாக தயாரிக்கப்பட்ட 61 சாரதி அனுமதிப்பத்திரங்கள், 05 சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஆகியவை இச்சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

அத்தோடு, இச்சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

 

Tue, 07/28/2020 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை