ஐ.தே.க தலைவர் ரணில் நாளை அட்டாளைச்சேனை விஜயம்

ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நாளை அட்டாளைச்சேனைக்கு விஜயம் செய்து லொயிட்ஸ் மண்டபத்தில் நடை பெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.  இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.தே.க பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் பொதுத் தேர்தல் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளருமான யூ.கே.ஆதம்லெவ்வை தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் தொடர்பில் அமைப்பாளரும் வேட்பாளருமான யூ.கே.ஆதம்லெவ்வை செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது, திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளர் நான் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க. க்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் எமக்கு இரு ஆசனங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் மரபினைக் கொண்டது.

அதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமும் மூவின மக்களை அரவணைத்தே பயணிக்கின்றோம். இது கடந்த கால வரலாறாகும். கட்சியின் பெயரில் ஒரு நலன் அல்லது அபிவிருத்திப் பணி கிடைத்து விட்டால் அதனை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தி முன்னுரிமை அடிப்படையில் வழங்கி வருகின்றோம்.

கடந்த காலங்களில் நாம் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளோம். 1000க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக சமுர்தித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சில பிரதேசங்களில் எமது அபிவிருத்திப் பணிகளுக்கு தடைகள் போடப்பட்டன. இருந்தும் அவற்றையெல்லாம்

வெற்றி கொண்டு நாம் பயணிக்கின்றோம். பிரதேச ரீதியாக நாம் மக்களை நேரடியாகச் சந்தித்து வருகின்றோம். மாற்றுக்கட்சிக் காரர்களினால் மக்கள் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் அவர்கள் எம்மிடம் பிரஸ்தாபிக்கின்றனர்.

கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறை காரணமாக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளைய கூட்டத்தில் வேட்பாளர்கள், ஐ.தே.க முக்கியஸ்த்தர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் என்றார்.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Wed, 07/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை