உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது அமெ. தடை

சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீன அரசியல்வாதிகள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது.

உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனையோர் மீது கூட்டுச் சிறைவைப்பு, மதத் துன்புறுத்தல்கள் மற்றும் கட்டாயக் கருத்தடை போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் பிராந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் குவாஹ்கு மற்றும் மேலும் மூன்று அதிகாரிகளுக்கு அமெரிக்காவுடன் தொடர்புடைய நிதி நலன்கள் தொடர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூர மேற்குப் பிராந்தியமான சின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டை சீனா நிராகரித்து வருகிறது.

எனினும் சுமார் ஒரு மில்லியன் பேர் தடுத்து வைக்கப்பட்டு முகாம்களில் மறு கல்வி புகட்டப்படுவதாக நம்பப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை முறியடிப்பதற்காக வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்தி வாய்ந்த அரசியல்பீட உறுப்பிரான சென் குவாஹ்கு அமெரிக்காவின் தடைக்கு உள்ளாகி இருக்கும் சீனாவின் உயர் அதிகாரி ஆவார். சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் கொள்கைகளின் கட்டமைப்பாளராக அவர் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதோடு முன்னர் அவர் திபெத்தில் பொறுப்பு வகித்திருந்தார். சின்ஜியாங் மக்கள் பாதுகாப்பு நிர்வாகத்தின் பணிப்பாளர் வாங் மிங்சான் மற்றும் சின்ஜியாங்கில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சு ஹெய்லுன் ஆகியோரே தடைக்கு உள்ளாகி இருக்கும் ஏனையவர்களாவர்.

இவர்களுடன் நிதிப்பரிமாற்றங்களில் ஈடுபடுவது அமெரிக்காவில் குற்றமாக்கப்பட்டிருப்பதோடு அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இவர்களின் சொத்துகள் முடக்கப்படுகின்றன.

 

Sat, 07/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை