Header Ads

இனபேதமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்

'நாம் அனைவரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடுகளின்றி  ஒன்றிணைந்து  பயணிக்க வேண்டும்' என்று கூறுகிறார் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ். ஆர். ஏ.ராஜபுத்திர வீரசிங்க.

தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியென்ற ஒன்று இல்லை. மொட்டு கட்சிதான் இருக்கிறது. மொட்டு கட்சியில் உள்ளவர்கள்தான் அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள். இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் காரர்கள் புறந்தள்ளப்படுகிறார்கள். ஜனநாயக நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இருக்க வேண்டும்" என்றும் ராஜபுத்திர வீரசிங்க தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் அரசியலுக்குள் நுழைவதற்கான முக்கிய காரணம் என்ன?

பதில்: நான் ஒரு பௌத்தர். வேறுபாடுகளின்றி எல்லோருக்கும் உதவி செய்யக் கூடியவர் என்ற அடிப்படையில் என்னை சஜித் பிரேமதாச போட்டியிடுமாறு வேண்டிக் கொண்டார். அந்த வகையிலேயே நான் இம்முறை களமிறங்கியுள்ளேன். சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒரு இணைப்புப் பாலமாக இருந்துள்ளேன். கலவரத்தை உருவாக்க முயற்சிகள் எடுத்த  தீய சக்திகளுக்கு எதிராகச் செயற்பட்டுள்ளேன்.

கேள்வி: நீங்கள் முஸ்லிம், தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி வருபவர் என நாங்கள் அறிந்து இருக்கின்றோம். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையிலேயே இன ஐக்கியத்திற்கான ஒரு பாலமாக  நான் செயற்படுகின்றேன். நல்ல பிரஜைகள் கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியமாகும் என்று நான் எப்பொழுதும்  கருதுபவன்.

சிங்களம், முஸ்லிம், தமிழ் என்று நான் பேதம் பார்ப்பதில்லை.  எல்லா இன மக்களுடனும் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் பழகி பணிகள் செய்துள்ளேன். எனவே இத்தேர்தலில் நிச்சயமாக  நான் வெற்றி பெறுவது உறுதியாகும்.

கேள்வி: சமூக நல்லிணக்கம் தொடர்பாக எத்தகைய பங்களிப்பைச் செய்துள்ளீர்கள்?

பதில்: திகன கலவரம் இடம்பெற்ற காலத்தில் பறஹகதெனிய முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவொரு அசம்பாவித  சம்பவமும் நிகழாமல் சிங்கள_ முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒரு இணைப்பு பாலமாக இருந்து ஒற்றுமை நிலைநாட்டுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன்.  இதனை அப்பிரதேச மக்கள் நன்கறிவார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு_சிங்கள முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகளின் போது ஏற்பட்ட கசப்புணர்வை நீக்கும் முகமாக முஸ்லிம்_ சிங்கள மக்களிடையே  நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நான் முஸ்லிம்களுடைய புனித ரமழான் மாதத்தில் விசேட இப்பதார் வைபவம் ஒன்றை என்னுடைய மண்டபத்தில் ஏற்பாடு செய்தேன். இதில் 3500 பேர் அளவில் கலந்து கொண்டனர். சர்வ மதத் தலைவர்கள், மௌலவிமார் எனப் பல தரப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இப்படியான நல்லிணக்கப்பாட்டை கொண்டு வரும்  விடயத்தில் அதிகம் பங்காற்றியுள்ளேன்.  ஆதலால் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் மிகுந்த நன்றிக் கடன் செலுத்த வேண்டிய பிரதான பங்கு அதிகம் இருக்கிறது. எனவே எனக்கு ஒரு விருப்பு வாக்கைத் தந்து என்னுடைய வெற்றியை உறுதி செய்வது குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் செய்யும் பெரும் கைம்மாறாக  அமையும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: நீங்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலை குறித்து என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலமாக அவர்களுக்கு என்ன தேவைகள் இருக்கின்றதோ ஐக்கிய இலங்கைக்குள் இறையாண்மைக்கு உட்பட்ட வகையில் அதனை வழங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாகும்.

நேர்காணல்: ஜீவராஜ்

Mon, 07/27/2020 - 08:05


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.