அவுஸ்திரேலியா, ஆசிய நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பற்றி அச்சம் அதிகரித்திருப்பதோடு அவுஸ்திரேலிய மாநில எல்லைகள் முடக்கப்பட்டு மதுபான விடுதிகளுக்குச் செல்வதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆசியாவின் பல பகுதிகளில் ஆரம்பத்தில் கடுமையாக தாக்கிய நிலையில் அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி முடக்க நிலையும் தளர்த்தப்பட்டுள்ளன.

கடுமையாக கட்டுப்பாடுகளை அமுல்படுத்திய அவுஸ்திரேலியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் அதிக உயிரிழப்பினை தவிர்த்துக் கொண்டது. எனினும் விக்டோரியாவில் சமூகப் பரவல் ஏற்பட்ட நிலையில் நியூ சவூத் வேல்ஸிலும் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஜூலை 20 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ{க்கான எல்லையை திறக்கும் திட்டத்தை தெற்கு அவுஸ்திரேலியா ரத்துச் செய்துள்ளது. சிட்னியின் மேற்கு புறநகர் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இரண்டு வர சுய தனிமைப்படுத்தலை குவின்ஸ்லாந்து அறிமுகம் செய்துள்ளது.

விக்டோரியா பிராந்தியத்துடன் தொடர்புபட்டு நியூ சவுத் வேல்ஸில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் அங்கு மதுபான விடுதிகள் 300 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மெல்போர்னில் ஆறு வாரம் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொங் கொங்கில் முதல் கட்ட கொரோனா வைரஸ் பாதிப்பின்போது ஒருசில சம்பவங்களுடன் தப்பித்த நிலையில் தற்போது அங்கு கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஹொங்கொங்கில் 52 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் கடந்த திங்கட்கிழமை பதிவாயின. இதனால் அங்குள் வோல்ட் டிஸ்னி பூங்காவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கலை அரங்கு ஒன்றில் 20 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புபட்ட 800க்கும் அதிகமானவர்களை கண்டறிவதை சுகாதார அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை