அரசியல் தீர்வு விடயத்தில் அரசு எப்பொழுதுமே தயார்

உரிய தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதே அவசியம் என்கிறார் பிரதமர்

நாட்டிலுள்ள சகல இன, மத, மொழி மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை காண்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் எப்பொழுதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தேசிய தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் ஒரு தரப்பு மட்டும் தயாராக இருந்து பயனில்லை. அரசியல் தீர்வுக்கு சகல தரப்பும் இணைந்து ஒத்துழைப்பு தர வேண்டியது கட்டாயம். அதிலும் குறிப்பாக அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இதர தமிழ் கட்சிகளுக்கும் பலதடவைகள் அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை சரிவர பயன்படுத்த வில்லை.

எனவே, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக இருக்கின்றோம். குறிப்பாக தேர்தல் காலங்களில் இது போன்ற விடயங்கள் தேர்தல் பிரசார மேடைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் அந்த விடயம் முடிந்து விடுகின்றது. அவர்கள் வாக்குகளை பெறுவதற்காக அவ்வாறு பேசுகிறார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அதாவது எமது கடந்த ஆட்சிக்காலத்திலும் சரி இப்போதும் சரி அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நாங்கள் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். அதனை உரிய தரப்பினர் சரியாக பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் இவ் விடயத்தில் நாங்கள் இலகுவான வெற்றியை, இலக்கை அடைய முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை