புதிய அரசின் ஊடாக நாடு முழுவதும் இன,மத பாகுபாடின்றி அபிவிருத்திகள்

அரச துறையை மீண்டும் பலப்படுத்திவிட்டோம்

- பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

அரச துறையை செயலற்றதாக்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானங்களை மாற்றி தமது ஆட்சிக் காலத்தில் அரச துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மொரட்டுவ லூனாவ களப்பு வளாகத்தில் (12) பிற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பலமான அரச துறையொன்று காணப்பட வேண்டியதன் மதிப்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் போதும் மற்றும் ஆரோக்கியமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதுமே மக்களுக்கு புரிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்து குறைவான வசதிகளுக்கு மத்தியில் அரச பணியாளர்கள் ஆற்றியது சாதாரணமானதொரு பணியல்ல எனத் தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் அரச துறையை மேலும் பலப்படுத்துவதாக கூறினார். அத்துடன், அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய, அனைத்து மதத்தவர்களும் தமது மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய ஒருமித்த நாடொன்றை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குவதன் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாம் அனைவரும் வெவ்வேறு இனத்தவர்கள் என்ற ரீதியிலும், வெவ்வேறு மதத்தவர்கள் என்ற ரீதியிலும், ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கான கௌரவம் மதத் தலைவர்களையும், மக்களையுமே சாரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தமது ஆட்சிக் காலத்தில் விகாரை, பள்ளிவாசல்கள், கோவில்கள் என்பவற்றின் அபிவிருத்தி இன மத பாகுபாடு பாராது வடக்கு, தெற்கு, கிழக்கு ,மேற்கு என பிரதேச பேதமின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அதுபோன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை நினைவுகூர்ந்த பிரதமர், எதிர்காலத்தில் புதிய அரசாங்கமொன்றின் ஊடாகவும் அவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை