அமெரிக்க ஜனாதிபதியாக பைடனின் வெற்றியை எதிர்பார்க்கும் பலஸ்தீனர்

ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கும் பலஸ்தீன பிரதமர் முஹமது சட்டய்யா, அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும்படி பலஸ்தீன பூர்வீகம் கொண்ட அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பலஸ்தீனர்களுக்கு பாதகமாக இஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரித்ததோடு அவர் கொண்டுவந்த அமைதித் திட்டத்தில் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேலின் இறைமையை ஏற்றிருந்தார்.

டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்காவுடனான உறவுகளை பலஸ்தீன நீர்வாகம் முறித்துக் கொண்டது. இந்நிலையில் பலஸ்தீன அதிகாரசபைக்கான உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியது.

“நவம்பரில் பைடன் தேர்வு செய்யப்பட்டால் முழுமையான மாறுபட்ட நிலை ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என சட்டய்யா தெரிவித்தார்.

பைடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். கடந்த காலங்களில் இஸ்ரேலின் யூதக் குடியேற்றங்களை அவர் எதிர்த்து வந்துள்ளார். “இஸ்ரேலுடனான இணைப்பு உட்பட இரு நாட்டு தீர்வு ஒன்றுக்கான எதிர்பார்ப்பை குறைக்கும் இரு தரப்பினதும் எந்த ஒரு தன்னிச்சையான செயற்பாடுகளையும் எதிர்க்கும் பைடன், தற்போதும் அதனை எதிர்ப்பதோடு ஜனாதிபதியான பின்னரும் எதிர்ப்பார்” என்று அவரது பிரசாரக் குழுவின் பேச்சாளர் மைக்கல் க்வின் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை