ஆசியக் கிண்ணப் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன -சௌரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவரான சௌரவ் கங்குலி, இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒன்றுகூடலிற்கு முன்னர் வெளியாகியிருப்பதால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது.

சௌரவ் கங்குலி சமூக வலைதளமான இன்ஸ்டக்ரம் மூலமாக இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த போதும் குறித்த தீர்மானம் ஆசியக் கிரிக்கெட் சம்மேளனம் எடுத்த முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டதா? இல்லையா என்பது தொடர்பில் எதனையும் கூறத்தவறியிருக்கின்றார்.

இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என கூறப்பட்ட போதும், பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்த காரணத்தினால், அது இந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையும் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை பாகிஸ்தான் அல்லாத ஒரு இடத்தில் நடாத்த முன்னர் ஆதரவு வழங்கியிருந்த நிலையிலையே சௌரவ் கங்குலியின் அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது.

அதேநேரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி எந்த கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்கும் என்பது தொடர்பிலும் குழப்பத்துடன் இருப்பதாக சௌரவ் கங்குலி கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

”உண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் எதுவென கூறுவது சிரமமாக இருக்கின்றது. நாங்கள் எங்களது தயார்படுத்தல்களை திறம்பட மேற்கொண்ட போதும், அரசாங்க விதிமுறைகளை தாண்டி எதுவும் செய்ய முடியாமல் உள்ளது. (உண்மையில்) நாங்கள் அவசரத்தில் இல்லை. ஏனெனில், எங்களது வீரர்களது உடல்நலப் பாதுகாப்பு மிக முக்கியம். நாங்கள் மாதம் தோறும் விடயங்களை அவதானிக்கின்றோம்.” என சௌரவ் கங்குலி கூறினார்.

மேலும் பேசியிருந்த சௌரவ் கங்குலி, இந்த ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பற்றிய ஐ.சி.சி. இன் முடிவினை அடுத்து கொரோனா வைரஸினால் தடைப்பட்டுப் போன இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

”(ரி 20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்படும் போது) ஐ.பி.எல். போட்டிகளை நடாத்த முயற்சி செய்வோம். அது இந்தியாவின் கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமானது. (அதோடு ஐ.பி.எல். போட்டிகளை) இந்தியாவிலேயே நடாத்த முயற்சிப்போம்.”

”ரி 20 உலகக் கிண்ணம் ஒத்திவைக்கப்படுவது விரைவில் நடக்கவுள்ளது. ஏனெனில், எல்லா நாடுகளும் ஐ.சி.சி. இடம் தீர்மானத்தைக் கேட்கின்றன. எங்களுக்கு அது இந்த ஜூலையின் மத்தியில் தெரியவரும். எனது உள்ளம் கூறுவதன்படி இது கொஞ்சம் கடினமானதாக இருக்கும்.”

இந்த ஆண்டுக்கான ரி 20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் நடைபெற எதிர்பார்க்கப்படும் நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவரான ஏர்ல் எட்டிங்ஸ் நடைமுறைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு ரி 20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய மண்ணில் இந்த ஆண்டு நடைபெறுவது சாத்தியம் இல்லை என கடந்த மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை