தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்; ராஜாங்கனையில் மட்டும் ஒத்திவைப்பு

சகல இடங்களிலும் சுமுகம்; 17 வரை வாக்களிப்பு ஏற்பாடு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்றைய தினம் முதல் ஆரம்பமானது. 

அதற்கிணங்க எதிர்வரும் 17ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

தபால் மூல வாக்களிப்பு நேற்றுக் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றதுடன் வாக்களிப்பு சுமுகமாக இடம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். 

வாக்களிப்பில் பங்கேற்ற வாக்காளர்கள் உடல் உஷ்ணம் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

நேற்றைய தினம் சுகாதார சேவையாளர்கள் மற்றும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களும் தபால்மூல வாக்குகளை அளித்தனர். 

அதேவேளை இன்றும் நாளையும் பொதுவாக அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன எதிர்வரும்16 மற்றும் 17ம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் தேர்தல் செயலகம், பொலிசார், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களளும் வாக்களிக்க முடியும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதேவேளை மேற்படி தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ம் திகதிகளில் தமது வாக்குகளை அளிக்க முடியும் என்றும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

அதேவேளை அநுராதபுரம் ராஜாங்கனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பகுதியில்கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் புதிதாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அநுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். அந்த பிரதேச செயலகப்பிரிவிற்கு தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

சுகாதார துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியை பேணுதல்,முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென ஆணைக்குழு வாக்காளர்களை  அறிவுறுத்தியுள்ளது.  அதேவேளை அரசு மற்றும் தனியார் துறைகளில் தொழில் புரிவோருக்கு வாக்களிப்பதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவர்களது தனிப்பட்ட விடுமுறை அல்லாது வாக்களிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் என்றும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

வாக்களிக்கும் நிலையத்தின் தூரத்துக்கு அமைய சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளதுடன் அதற்கிணங்க 40 கிலோமீட்டர் தொலைவிற்குள் வாக்களிப்போருக்கு அரை நாள் விடுமுறையும் 40 கிலோ மீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரை தொலைவு உள்ள நபர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும் 100 கிலோ மீட்டர் முதல் 150 கிலோமீட்டர் வரையிலான தொலைவில் உள்ளோருக்கு ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீட்டருக்கு மேலதிகமான தொலைவில் வசிப்பவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்க வேண்டும் என்றும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.  அதை வேளை சுய தனிமைப்படுத்தலில் உள்ள தபால் மூல வாக்காளர்கள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   தபால் மூல வாக்களிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆயிரம் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின்நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு வசதியாக மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

Tue, 07/14/2020 - 07:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை