டிரம்பை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ள ஈரான்

ஈரானிய இராணுவ ஜெனரல் காசெம் சுலைமானி ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் மேலும் பலர் மீது பிடியாணை பிறப்பித்திருக்கும் ஈரான் அவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியை நாடியுள்ளது.

கடந்த ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் டிரம்புடன் மேலும் 30க்கும் அதிகமானவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக டெஹ்ரான் வழக்குத்தொடுனர் அலி அல்காசிமிர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குற்றம்சாட்டப்பட்ட ஏனையவர்களின் விபரத்தை வெளியிடாத அல்காசிமிர், டிரம்பின் ஜனாதிபதி பதவிக் காலம் முடிவுற்ற பின்னரும் அவர் மீதான வழக்குத் தொடரும் என்று தெரிவித்தார்.

அரசியல், இராணுவ, சமய அல்லது இன தரப்பினரின் மீதான எந்த ஒரு தலையீடு அல்லது செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டரீதியாக தடுக்கப்பட்டுள்ளது என்று இது குறித்து கருத்து வெளியிட்ட பிரான்சின் லியோன் நகரை தலைமையகமாகக் கொண்ட இன்டர்போல் தெரிவித்தது.

“பொதுச் செயலாளருக்கு இவ்வாறான கோரிக்கை ஒன்று அனுப்பப்பட்டால் இன்டர்போல் அது பற்றி கருத்தில் கொள்ளாது” என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

Wed, 07/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை