84 வயதான சவூதி மன்னர் மருத்துவமனையில் அனுமதி

சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் பித்தப்பை வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் சவூதியில் ஆட்சி புரிந்து வரும் 84 வயதான மன்னர் சல்மான், தலைநகர் ரியாதில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அரச செய்தி நிறுவனமான எஸ்.பீ.ஏ குறிப்பிட்டபோதும், அது பற்றி மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

இஸ்லாத்தின் புனிதத் தலங்களின் காவலராக இருக்கும் மன்னர் சல்மான் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டரை ஆண்டுகள் முடிக்குரிய இளவரசராக இருந்தே மன்னராக முடிசூடினார். அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரியாத் பிராந்தியத்தன் ஆளுநராகவும் இருந்தார்.

எனினும் தற்போது நடைமுறையில் ஆட்சியில் இருக்கும் சல்மானின் மகன் முஹமது பின் சல்மானே அடுத்து பதவிக்கு வருவதற்கான முடிக்குரிய இளவரசராகவும்; உள்ளார். அவர் சவூதியில் பல சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

34 வயதாகும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் சவூதி பத்திரிகையாளர் கசோக்கி கொலை செய்ய உத்தரவிட்டதாக முஹமது பின் சல்மான் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அதை அவர் ஒரு பேட்டியில் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மன்னர் சல்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமியின் சவூதி அரேபிய பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சவூதியின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார் என ரோய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

Tue, 07/21/2020 - 09:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை