ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த 8 பேருக்கு மலேரியா

அண்மையில் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 08 பேர் மலேரியா நோயினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள 08 பேரே இவ்வாறு மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியுள்ள 05 பேரும், நீர்கொழும்பு வைக்கால் பிரதேசத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியுள்ள 03 பேருமே இவ்வாறு மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எவரும் மலேரியா நோயினால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்த பலருக்கு மலேரியா நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாடுகளிலிருந்து வந்த 53 பேர் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும், ஒரே வேளையில் அதிகளவான மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும், அவர் சுட்டிக்காட்டினார்.  

இந்நிலையை கருத்திற் கொண்டு மலேரியா உள்ள நாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கு PCR பரிசோதனைக்கு மேலதிகமாக, மலேரியா பரிசோதனையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அருகில் நுளம்புகளை அழிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Thu, 07/09/2020 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை