உலகெங்கும் 40 நாடுகளில் நாளாந்த கொரோனா தொற்றில் சாதனை உச்சம்

பல நாடுகளிலும் 2ஆம் கட்டப் பாதிப்பு

உலகெங்கும் சுமார் 40 நாடுகளில் நாளாந்த கொரோனா தொற்று சம்பவங்கள் கடந்த வாரத்திற்குள் சாதனை எண்ணிக்கைக்கு அதிகரித்திருப்பதோடு முந்திய வாரத்துடன் ஒப்பிடுகையில் வைரஸ் தொற்று இரட்டிப்பாகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மாத்திரம் அன்றி அவுஸ்திரேலியா, ஜப்பான், ஹொங்கொங், பொலிவியா, சூடான், எத்தியோப்பியா, பல்கேரியா, பெல்ஜியம், உஸ்பகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் உட்பட நாடுகளிலும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக சமூக இடைவெளியை பேணும் முடக்க நிலையை ஆரம்பத்திலேயே தளர்த்திய பல நாடுகளில் இரண்டாம் கட்ட பாதிப்பின் உச்சத்தை எட்ட ஆரம்பித்துள்ளன.

“நாம் பழைய வழக்க நிலைக்கு திரும்ப மாட்டோம். நாம் எமது வாழ்வை வாழ்கின்ற முறையில் இந்தப் பெரும் தொற்று ஏற்கனவே மாற்றத்தை கொண்டுவந்துள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் அதனோம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ அறிக்கைகளை கொண்டு ரோய்ட்டர் தயாரிக்கும் தரவுகளில், பல நாடுகளிலும் வைரஸ் தொற்றின் நாளாந்த சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் குறைந்தது ஏழு நாடுகளில் மூன்று வாரங்களுக்கு முன்னரே இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதோடு, குறைந்தது 13 நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் குறைந்தது 20 நாடுகளில் கடந்த வாரமும் 37 நாடுகளில் இந்த வாரமும் நாளாந்த தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

எனினும் பல நாடுகளிலும் குறிப்பாக மோசமாக சுகாதார பராமரிப்பு முறை இருக்கும் நாடுகளில் நோய்த் தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே கணக்கிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நோய்த்தொற்று சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில் அடுத்த ஒருசில வாரங்களில் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிக நோய்த்தொற்றாளர்களைக் கொண்ட நாடாக முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 4 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு தொடர்ச்சியாக நான்கு நாட்களாக தலா 1,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன் அடுத்த இடங்களில் இருக்கும் பிரேசில், இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான போதும் இதன் உச்சத்தை எட்டுவதற்கு இன்னும் ஒருசில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் 16 மில்லியனை எட்டியிருப்பதோடு 644,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை