வெனிசுலாவை நோக்கி செல்லும் 4 ஈரான் கப்பல்களை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி

வெனிசுலாவுக்கு பெட்ரோல் மற்றும் எரிபொருள் உற்பத்திகளை எடுத்துச் செல்லும் ஈரானின் நான்கு கப்பல்களை கைப்பற்றுவற்கான நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த மே மாதம் 1.5 மில்லியன் பீப்பாய் பெட்ரோலுடன் 5 கப்பல்களை ஈரான் அனுப்பிய நிலையிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில் வெனிசுலாவை நோக்கிச் செல்லும் நான்கு கப்பல்களை கைப்பற்றுவதற்கான பிடியாணையில் வொசிங்டனில் அமெரிக்க நீதிபதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

பொருளாதார தடைகளை தவிர்க்க ஈரான் மூன்றாம் தரப்பு கப்பல்களை பயன்படுத்தி சுமார் 50 மில்லியன் டொலர் பெறுமதியான 1.2 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் உட்பட சரக்குகளை எடுத்துச் செல்வதாக அமெரிக்க அரச வழங்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டால் அது கடற்கொள்ளையாக அமையும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. “இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகவும் ஐ.நா சாசனம் உட்பட சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது” என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதில் வெனிசுலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நான்கு கப்பல்களில் பெல்லா என்ற பெயர் கொண்ட கப்பல் பிலிப்பைன்சுக்கு அருகில் இருப்பதாக பயணத் தரவுகள் காட்டுகின்றன. எனினும் பண்டி என்ற கப்பல் தனது செய்மதி கண்காணிப்பு அமைப்பை கடந்த ஜுன் 29 ஆம் திகதி அணைத்துள்ளது. அடுத்த இரண்டு கப்பல்களும் கடந்த மே மாதம் கிரேக்கத்திற்கு அருகில் கண்காணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் கையிறுப்பைக் கொண்ட நாடாக இருக்கும் வெனிசுவேலாவில் உள்நாட்டுக்கு போதுமான அளவு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் உற்பத்தி செய்யப்படாத நிலையில் அங்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“எமது இரு கிளர்ச்சி தேசங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் ஒருபோதும் அடிபணியாது” என்று மடுரோ முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

 

 

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை