எலிக் காய்ச்சல் எட்டு மடங்கினால் அதிகரிப்பு; 23,371 பேர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்குள் நாட்டில் சுமார் எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு மருத்துவ நிபுணரொருவர் தெரிவித்தார். 

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் 17 ஆம் திகதி வரை இக்காய்ச்சலினால் 23 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த வருடம் 6021 பேர் மாத்திரமே இக்காய்ச்சலுக்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இவ்வருடம் மொனறாகலை மாவட்டம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

இக்காய்ச்சல் குறித்து மக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 17 ஆம் திகதி வரை எலிக்காய்ச்சல் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ள போதிலும் இக்காலப் பகுதியில் அதிகூடிய நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களிலும் இக்காய்ச்சலுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. 

அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 3284 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2253 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2230 பேரும், கண்டி மாவட்டத்தில் 2010 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2003 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 1940 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 1408 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1393 பேரும் காலி மாவட்டத்தில் 1108 பேரும் என்றபடி அதிகூடியளவில் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 

இவ்வருடம் ஜனவரி மாதம் 11,607 பேர் இக்காய்ச்சல் உள்ளாகியுள்ள போதிலும் மே, ஜுன் மாதங்களிலும் இதற்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்ககூடியதாக உள்ளது. 

இந்நாட்டில் விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாக விளங்கிவரும் இக்காய்ச்சல் அண்மைக்காலமாக மழைக்காலநிலையுடன் சேர்த்து சேறு சகதி மிக்க பிரதேசங்களில் நடமாடுபவர்கள், விளையாடுபவர்கள், வேலைகளில் ஈடுபடுபவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளது. அதனால் வயல் நிலங்களிலும் சேறு சகதி மிக்க சுரங்கத் தொழில், வடிகான் போன்ற பகுதிகளிலும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் பிரதேசத்திலுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இக்காய்ச்சலைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய மாத்திரிரைகளை இலவசமாகப் பெற்றுப் பாவிக்குமாறும் கை, கால்களில் காயங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றில் நீர் புகமுடியாதபடி மூடிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

இக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றவர்களுக்கு கடும் காய்ச்சல், கடும் தலைவலி, உடலில் குளிர் உணர்வு, உடலில் மஞ்சள் தன்மை ஏற்படல், சிறுநீர் வெளியேறுவது குறைவடைதல் போன்றவாறான அறிகுறிகளும் வெளிப்படும். அதன் காரணத்தினால் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் தாமதியாது மருத்துவரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மர்லின் மரிக்கார் 

Tue, 07/21/2020 - 06:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை