20க்கு20 உலக கிண்ணம் குறித்து ஐ.சி.சி. இன்று இறுதி முடிவு

அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ரி 20 உலக கிண்ணம் குறித்து ஐசிசி இறுதி முடிவை இன்று அறிவிக்க இருக்கிறது.

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ம் திகதி முதல் நவம்பர் 15-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கிண்ண போட்டி நடைபெறுமா? என்பது சந்தேகமே. ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பலமுறை கூடியும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இந்தத்தொட்ர் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர்களின் கூட்டம் வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலககிண்ண போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.

இந்தப் போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்படலாம். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கிண்ணம் இந்தியாவில் நடக்கிறது. இதனால் இந்தப் போட்டி 2022 -ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம்.

உலக கிண்ணம் ஒத்தி வைக்கப்படும்போது அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

இந்த போட்டியை செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 வரை நடத்த கிரிக்கெட் சபை முடிவு செய்திருக்கிறது.

ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே இந்த போட்டியை எப்படியாவது எந்த இடத்திலாவது நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை