2020 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்கு புதிய திட்டம்

ஏற்பாடுகள் பூர்த்தி என்கிறார் பந்துல குணவர்தன

2020 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை சகல பிரிவுகளின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.  இம்முறை மொத்த நெல் அறுவடை சுமார் 2.1 மில்லியன் மெட்ரிக் டொன்களாக இருக்கக்கூடுமென விவசாய திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளதுடன் ஜுலை மாதம் தொடக்கம் அறுவடை சந்தையை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைவாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலப் பரப்பிற்கு அமைவாக ஆகக்கூடிய ரீதியில் ஒரு விவசாயிடமிருந்து 5000 கிலோ நெல் என்ற ரீதியிலும் தரத்துடனான சம்பா, நாடு மற்றும் கீரி சம்பா முதலான வகை நெல் 1 கிலோ கிராமிற்காக 50 ரூபா மற்றும் நீர்த்தன்மையுடனான நெல் கிலோ ஒன்றிற்காக 42 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையை வழங்குவதற்கும் சமீபத்தில் கூடிய அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மகாவலி, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இதற்கான வேலைத்திட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

இதில் நெற் சந்தைப்படுத்தும் சபை நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதில் ஈடுபடுவதுடன் , பின்தங்கிய பிரதேசங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் பணியை விவசாய அமைப்பு பிரதிகளின் ஊடாக முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீர்த்தன்மையுடனான நெல்லை விற்பனை செய்வதற்கு எதிர்பார்த்துள்ள விவசாயிகளுக்கு நெல்லை உலர்த்தும் வசதிகளைக்கொண்ட நெல் ஆலை உரிமையாளர்கள் அல்லது அமைப்புக்கள் ஊடாக நெல் உலர்த்தப்பட்ட பின்னர் உரிய தரத்துடன் தயார் செய்து நெற்சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியம் பொறுப்பேற்கும் முறையொன்றை முன்னெடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் நெற்சந்தைப்படுத்தும் சபை நேரடியாக பங்களிப்பை வழங்குவதினால் விவசாயிகளுக்கு அதிக விலைக்கு தமது அறுவடையை விற்பனை செய்வதற்கு தேவையான பின்புலத்தை வகுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன அவர்கள் மேலும் தெரிவித்தார்.

Mon, 07/20/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை