கொவிட்-19: பல நாடுகளும் தவறான திசையில் செல்வதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

அரசுகள் மேலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்காதபட்சத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மிக மோசமான நிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல நாடுகளும் இந்த விடயத்தில் தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார். நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகரிப்பது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அல்லது பின்பற்றப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்–19 தொற்றின் மையப்புள்ளியாக அமெரிக்கா தற்போது உள்ளது. அந்நாட்டு சுகாதார நிபுணர்கள் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு இடையே அங்கு நோய்த் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

உலகின் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 3.3 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதுடன் 135,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக இது பற்றிய தரவுகளை சேகரிக்கும் ஜோன்ஸ் ஹொப்கின்சன் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய டெட்ரோஸ், “தலைவர்களின் குழப்பமான செய்திகள் இந்தப் பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

“சமூகத்தின் முதல் எதிரியாக இந்த வைரஸ் தொடர்ந்து இருந்தபோதும், இது பற்றி பல அரசுகள் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகள் இதனைப் பிரதிபலிக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். சமூக இடைவெளி, கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகள் பொருத்தமான சூழ்நிலைகளில் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பழைய இயல்புநிலைக்கு திரும்ப முடியாது என்றும் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

“இந்த அடிப்படைகளை பின்பற்றாவிட்டால் பொருந்தொற்று பரவிக்கொண்டே இருப்பதுவே ஒரே வழியாக இருக்கும்” என்று மேலும் குறிப்பிட்ட டெட்ரோஸ், “இது மேலும், மேலும், மேலும் மோசமடையும்” என்று எச்சரித்தார்.

அமெரிக்காஸ் பிராந்தியத்தில் சில நாடுகள் முடக்க நிலையை தளர்த்தியது மற்றும் சில பகுதிகளை திறந்தது வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவுவதற்கு காரணமாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவுக்குப் பொறுப்பான டொக்டர் மைக் ரியான் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை