கொவிட்-19: உலகெங்கும் நாளாந்த தொற்று சம்பவங்கள் புதிய உச்சம்

தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் அதிகரிப்பு

கடந்த 24 மணி நேரத்திற்குள் உலகெங்கும் சுமார் 260,000 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஒரு நாளைக்குள் பதிவான அதிக எண்ணிக்கை என்று உலக சுகாதார அமைப்பு கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.

நாளாந்த நோய்த் தொற்று எண்ணிக்கை கால் மில்லியனைத் தாண்டி இருப்பதும் இது முதல் முறை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளிலேயே அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த மே 10 ஆம் திகதிக்கு பின் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் ஒரு நாளில் உயிரிழிந்தவர்கள் எண்ணிக்கையும் 7,360 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக ஒருநாளைக்கு முன்னரே ஒரு நாளில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தன. இதன்படி கடந்த சனிக்கிழமை முடிவின்போது உலகொங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 14 மில்லியனைத் தாண்டி இருந்ததோடு 600,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதில் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் அதிகபட்சமாக 71,484 புதிய தொற்றுச் சம்பவங்களும் பிரேசிலில் 45,403, இந்தியாவில் 34,884 மற்றும் தென்னாபிரிக்காவில் 13,373 தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆகும்போது உலகில் ஒரு மில்லியனுக்கும் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான மூன்றாவது நாடாக இந்தியா புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவை விடவும் அமெரிக்கா மற்றும் பிரேசிலிலேயே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தியா நோய்த் தொற்றின் உச்சத்தை எட்ட இன்னும் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் கடந்த வியாழக்கிழமை 2 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்களை தொட்ட பிரேசிலில் ஒரு மாதத்திற்குக் குறைவான காலத்திலேயே இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதோடு நாளாந்தம் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் 40,000ஐ தொட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் மாநிலங்கள் மற்றும் நகரங்கள் நோய்ப் பரவலை கட்டுப்படுத்த போராடி வருகின்றன.

உலகில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் 3.7 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தபோதும் இதனை கட்டுப்படுத்த மாநில அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதிய வெற்றி அளிக்கவில்லை.

Mon, 07/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை