போதைப் பொருள் பணியக அதிகாரிகள் 18 பேர் கைது

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருபோதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அத்துடன் இதுவரை போதைப் பொருள் வர்த்தகர்களுடன் சம்பந்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்களென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.  

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ராகம பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மீள விற்பனை செய்வதற்கான வழிநடத்தலை மேற்படிபொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபின் கரந்தெனிய பகுதியை சேர்ந்தவர் எனவும் குறித்த சந்தேக நபருக்கு பாரிய பெறுமதியுள்ள நான்கு காணிகள் சொந்தமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  

அதேவேளை போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட

போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 12 பேர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.  

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை ஜூலை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

அதே வேளை கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களின் சொத்து விபரங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் 21 அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்துடன் இணைந்து செயற்பட்ட சந்தேக நபர்களின் 7 வாகனங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடையவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.  (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்  

Thu, 07/09/2020 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை