தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா; ஜிந்துப்பிட்டியில் 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா; ஜிந்துப்பிட்டியில் 154 பேர் தனிமைப்படுத்தலுக்கு-29 Families of 154 People Jinthupitiya Kotahena Sent to Quarantine

கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 154  பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக, கொழும்பு மாநகர சபை சிரேஷ்ட மருத்துவ அதிகாரி, வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு, கடந்த ஜூன் 26ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்றையதினம் (02) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் IDH மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரது குடும்பத்திலுள்ள 8 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறித்த பகுதியில் அவர்களுடன் நேரடித் தொடர்புடைய 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேரை கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டதாகவும், எனவே அப்பகுதியை தனிமைப்படுத்தி மூட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த நோயாளி சமூகத்திலிருந்து அடையாளம் காணப்படவில்லை எனவும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதனாலும், அவர் மூலம் சமூக ரீதியில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

Fri, 07/03/2020 - 12:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை