141 கொரோனா தடுப்பு மருந்துகளுக்காக ஆய்வு

உலக நாடுகளில் கொரோனா வைரசுக்கு எதிராக 141 தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் சிலர் இன்னும் ஒரு சில மாதங்களில் அதில் வெற்றியடையக் கூடும். ஆனால் முழுமையான பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, என்றாலும் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றும் ‘தி வொஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்காக அவர் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உலக அளவில் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் 160,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றை ஒரு உலகளாவிய வைரஸ் தொற்றாக உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் 11ஆம் திகதி அறிவித்தது. தற்போது உலகெங்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 11 மில்லியனை நெருங்கியுள்ளது. அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை