இலங்கையில் உள்ளூர் போட்டிகள் 14 ம் திகதி முதல் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட்டின் 2019 - 20 ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான உள்ளூர் போட்டிகள் மீண்டும் இம்மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட14 அணிகள் மோதும், மேஜர் லீக் பிரிவு ஏ போட்டிகள், உள்ளூர் போட்டித் தொடரின் ஆரம்ப கட்டமாக சுப்பர் 8 மற்றும் ப்ளேட் பிரிவுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. எனினும், பிரிவு பி தொடர்பிலான எந்தவொரு தகவல்களும் வெளியிடப்படவில்லை. 

சுகாதார அமைச்சு இந்த போட்டித் தொடர்களை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், வழங்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார். 

பிரிவு ஏ தொடரின் குழு ஏ மற்றும் குழு பி ஆகியவற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும் என்பதுடன், மீதமுள்ள 6 அணிகளும் ப்ளேட் சுற்றில் போட்டியிடும். 

நடப்பு சம்பியனான கொழும்பு கிரிக்கெட் கழகம் இம்முறை குழு ஏ இல் நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளதுடன், மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான முன்னணி அணியாகவும் உள்ளது. அதேநேரம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (ஏ குழுவில் 2 ஆம் இடம்), சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணி (குழு பி முதலிடம்) ஆகிய அணிகளும் கிண்ணத்துக்கான எத்தணிப்பை காட்டி வருகின்றன. 

சாதாரணமாக மேஜர் லீக் பிரிவு ஏ தொடரின் சுப்பர் 8 போட்டிகள் நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெற்றாலும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு போட்டிகள் மூன்று நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் போட்டிகள் நிறைவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ப்ளேட் சுற்றுக்கான போட்டிகள் வழமைபோன்று மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் மேஜர் லீக் பிரிவு ஏ தொடரை பலப்படுத்தும் முகமாக 14 அணிகள் கொண்ட இந்த போட்டித் தொடரை அடுத்த பருவகாலத்தில் 12 அணிகள் கொண்ட தொடராக நடத்துவதற்கான ஆரம்ப கட்ட திட்டங்களை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது. 

எவ்வாறாயினும், தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக இலங்கை கிரிக்கெட் சபை பிரிவு பி தொடர்பிலான எந்தவொரு தகவல்களையும் வெளிப்படுத்தவில்லை. 12 அணிகள் மோதும் இந்த தொடரில், தற்போது 7 போட்டிகள் வீதம் நடைபெற்று முடிந்துள்ளன. இதில், பொலிஸ் விளையாட்டு கழகம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், அடுத்த இடங்களை இலங்கை துறைமுக அதிகாரசபை அணி மற்றும் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகங்கள் பிடித்துள்ளன. 

பிரிவு பி அணிகளுக்காக விளையாடிய அதிகமான வெளிநாட்டு வீரர்கள் தற்போது சுகாதார காரணங்களால், நாடு திரும்பியுள்ளனர். இதனால், எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் வரை இலங்கை கிரிக்கெட் சபை இந்த தொடருக்காக காத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொவிட்-19 வைரஸிற்கு எதிராக வெற்றிகரமான முன்னேற்றத்தினை இலங்கை கொண்டுள்ள நிலையில், மேஜர் லீக்கின் சுப்பர் 8 தொடர், இலங்கையில் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தேசிய அணிக்கு சர்வதேச தொடர்கள் இல்லாத காரணத்தினால், தேசிய அணி வீரர்கள் அதிகமானோர் இந்த தொடரில் விளையாடலாம் என்ற எதிர்பார்ப்பும் வெளியாகியுள்ளது.     

Wed, 07/08/2020 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை