113 ஆசனங்களைப் பெறுவதற்கு நாம் திட்டம் வகுத்திருக்கிறோம்

'நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் கூடிய தலைவர்கள் மட்டுமன்றி சொல்வதை செய்யக் கூடிய தலைவர்களும் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர்' என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹர்ஷ டி சில்வா அண்மையில் எமக்குப் பேட்டியளித்தார்.

கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்குமென நினைக்கிறீர்கள்?  

பதில்: 113 ஆசனங்களைப் பெறுவதற்கு நாம் திட்டம் வகுத்திருக்கிறோம். மக்கள் எப்படி வாக்களிப்பாளர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும்.  

கேள்வி: கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நடந்ததை பார்க்கும் போது மக்கள் மீண்டும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?  

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கே வாக்களித்தனர். மக்களுக்காக சேவையாற்ற அவருக்கு மக்கள் ஆணையை வழங்கினர். நாங்கள் இம்முறை சஜித்தை பிரதமராக்க முயற்சி செய்கின்றோம். நாட்டின் நாலா புறங்களிலும் இருந்து நாம் அனைவரும் அவருக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கவிருக்கிறோம். ஜனாதிபதித் தேர்தலில் அவர் தனித்து நின்றே வாக்குக் கேட்க வேண்டியிருந்தது. இம்முறை அவர் தனித்து நின்று வாக்குக் கேட்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்குக் கேட்கின்றோம்.  

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியில் இம்முறை புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறுகிறது. அதில் இருந்த தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாறி விட்டனரா?  

பதில்: இது பற்றி நான் எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியையோ அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையோ விமர்சிக்க நான் விரும்பவில்லை.  

கேள்வி: கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடப்பது பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?  

பதில்: சமூகத்தைப் பற்றித்தான் நாங்கள் கவலைப்படுகிறோம். ஆனால் நாங்கள் தேர்தலுக்கு பயப்படுவதாகவே கூறுகின்றனர். தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதியை தேர்தல் ஆணையாளரே தீர்மானித்துள்ளார். அந்தத் திகதியில் தேர்தலை நடத்த நாம் தயாராகியுள்ளோம். குறித்தபடி ஓகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலுக்கு முகங்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.  

கேள்வி: பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல ரூபா நோட்டுக்களை அச்சடித்துக் கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  

பதில்: உங்களுக்கு வயிற்றுவலி இருந்தால் வயிற்றுவலிக்குத்தான் நீங்கள் மருந்து எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக தொண்டைக்கு மருந்து எடுத்தால் வயிற்றுவலி தீராது. அரசாங்கம் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் நோட்டுக்களை அச்சடிக்குமாறு மத்திய வங்கியை பலவந்தப்படுத்துகிறது. வர்த்தக வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் இருப்பதே இப்போது உள்ள பிரச்சினை. இதற்காக நோட்டுக்களை அச்சிட்டால் பிரச்சினை தீராது. பணவீக்கம்தான் ஏற்படும்.  

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  

பதில்: நாட்டுக்கான அபிவிருத்தி தொடர்பாக நல்ல நோக்கத்தை கொண்டுள்ளவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும். அறிவின் அடிப்படையிலான போட்டித்தன்மையுடன் கூடிய சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டை அபிவிருத்தி செய்வதுடன் மட்டுமின்றி நான் சொல்வதை நிறைவேற்றியும் காட்டியிருக்கிறேன். அதற்கு ‘சுவ செரிய’ நல்லதொரு உதாரணம்.  

கேள்வி: ‘சுவ செரிய’ திட்டம் தங்களுடையது என்று பலர் கூறி வருகிறார்களே? இது பற்றி உங்கள் கருத்து என்ன?  

பதில்: ‘வெற்றிக்கு பல தந்தையர், ஆனால் தோல்வி ஒரு அநாதை' என்று ஒரு கூற்று உண்டு. அது போலத்தான் எதுவும். 2015 மார்ச்சில் 'சுவசெரிய' தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் யாழ் சின்ஹா ஆகியோருடனும் நடைபெற்றது. எனது நண்பர் ஒருவர் மோசமாக நோய் வாய்ப்பட்டதையடுத்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.  

இவ்விடயம் தொடர்பாக முன்னர் எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுண்டு நாம் ஒரு தரப்புக்குச் சென்றதை அன்று என் மீது சேறு பூச பலர் முன்வந்தனர். ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பில் பங்காளர்களாகலாம். ஏனெனில் அவர்கள்தான் அரசாங்கத்தின் பின்னால் இருந்து திட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். எது எவ்வாறெனினும் இத்திட்டம் எனது சேவையில் உதித்த ஒன்றாகும். இந்தியப் பிரதமர் மோடியுடன் இது பற்றி நானே பேசினேன். இத்திட்டம் வெறுமனே மானியத்தை பெறும் ஒன்றல்ல. மானியத்தை பெற்று தோல்வியுற்ற பல திட்டங்கள் பற்றி நாம் அறிவோம். எனினும் சுவசெரிய திட்டத்தை நான் உருவாக்கி இப்போது அது இருக்கும் நிலைவரை அதனை கொண்டு வந்துள்ளேன். நாட்டில் உள்ள மிகவும் சீரான ஒரு சேவையாக அது உள்ளது. நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். மக்கள் அதன் மூலம் பயன் பெறுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

ஆன்யா விபுலசேன
தமிழில்: என். ராமலிங்கம்

Wed, 07/22/2020 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை