அமெரிக்காவில் தினந்தோறும் 100,000 பேர் பாதிக்கும் அச்சம்

கொவிட்–19 நெருக்கடி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை 47,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை விரைவில் இரட்டிப்பாகக் கூடும் என்று அமெரிக்காவின் பிரதான தொற்றுநோய் நிபுணர் எச்சரித்துள்ளார்.

கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாநிலங்கள் அமெரிக்காவின் புதிய நோய்த் தொற்று மையங்களாக மாறியுள்ளன.

“தற்போது நாம் தெளிவாகவே முழுமையான கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை” என்று தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் அன்தோனி பவுச்சி செனட் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். “இது மிக மோசமான நிலையை எட்டக் கூடும் என்று நான் கவலை அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் வைரஸை குறைப்பதற்கு நாடளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளாந்த நோய்த் தொற்று சம்பவங்கள் 100,000ஐ எட்டக்கூடும் என்று பவுச்சி எச்சரித்துள்ளார்.

டெக்சாஸ், புளோரிடா உட்பட குறைந்தது 10 மாநிலங்களில் கொவிட்–19 சம்பவங்கள் ஜூன் மாதத்தில் இரட்டிப்பாகியுள்ளன. டெக்சாஸ் மற்றும் அரிசோனா மாநிலங்களில் சில பகுதிகளில் வைரஸ் தொற்று நோயாளர்களுக்கான மருத்துவமனை அவசர சிகிச்சை படுக்கைகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 2.7 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 130,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை