த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜுலையில் வெளியீடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படவிருப்பதாக கூட்டணியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் வடபுலத்து மக்கள் மிக ஆர்வம் காட்டி வருவதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவு பெருகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அறிவுறுத்தல் காரணமாக பெரிய அளவில் பிரசாரக் கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறிய கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் தேர்தல் வித்தியாசமானதாகக் காணப்படுவது போன்றே வடக்கில் பல்முனைப் போட்டியாகவே காணப்படுகின்றது.

ஆனால் வடக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான நம்பிக்கை இழக்கவில்லை. வடக்கில் ஆகக் கூடுதலான ஆசனங்களை நிச்சயம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதி எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கென தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதில் உயர் மட்டம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விஞ்ஞாபனத்தில் தமிழினத்தின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம், வடக்கில் வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டம், வடபுலத்து  பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டம் உட்பட பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விஞ்ஞாபனம் காணப்படுமென சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்த விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி அல்லது அதே வாரத்தில் ஒரு நாளில் மக்கள் பயணப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

எம். ஏ. எம். நிலாம்

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை