உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

நயினாதீவு ஆலய வாசலில் பாதணிகளுடன் பாதுகாப்பு தரப்பு;

யாழ். DIG தலைமையில் விசாரணை;  சம்பந்தப்பட்ட தரப்பு வருத்தம் தெரிவிப்பு

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய சம்பந்தப்பட்ட படையினரிடம் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ் மாஅதிபரினால் உடனடி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

'நயினாதீவு ஆலய வாசலில் பாதணிகளுடன் பொலிஸார்' என்ற தலைப்பில் நேற்று எமது பத்திரிகையில் முன்பக்க செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர், உடன் விசாரிக்குமாறு பணித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து அங்கஜன் இராமநாதனினால் உரிய தரப்பினருக்கு அறியப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று பணிப்புரை விடுத்தார்.

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் இனி நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்தே வட பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்

மாஅதிபரினால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட படையினர்,வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்ததுடன், இனி இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை