ஹூல் வழங்கிய பேட்டி; மொழிபெயர்ப்பு கிடைத்ததுமே அடுத்த கட்ட நடவடிக்கை

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் என்ன கூற முனைந்துள்ளார் என்பதை மொழிபெயர்ப்பின் மூலம் அறிந்துகொண்டு அது மட்டுமன்றி அவரோடு அது தொடர்பில் கலந்துரையாடிய பின்பே தேர்தல் ஆணையாளர் என்ற வகையில் அதைப் பற்றி நான் எனது கருத்தை வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மேற்படி விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது, பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கருத்துப்பட விடயங்களை கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

அது தொடர்பில் தற்போது நாட்டில் பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு ஒன்றையும் முன்வைத்துள்ளார். 

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

மேற்படி விவகாரம் தொடர்பில் நான் இரண்டு விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன். 

அவரது கருத்தை வெளியிட்டது ஒரு தமிழ் ஊடகம் என்பதால் அதற்கு சட்டபூர்வமான மொழிபெயர்த்தல் ஒன்று அவசியமாகிறது.  

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பாளரினால் அந்த மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். 

அதேவேளை அந்த மொழிபெயர்ப்பு மட்டும் போதாது. மறுபக்கம் அந்த கருத்தை வெளியிட்டுள்ள எமது ஆணைக்குழுவின் சம்பந்தப்பட்ட உறுப்பினர் இந்தக் கருத்தின் ஊடாக எதை சொல்ல விளைகின்றார் என்பதை அறிய வேண்டும். 

இது இரண்டையும் செய்யாமல் என்னால் தன்னிச்சையாக எனது கருத்து எதையும் தெரிவிக்க முடியாது. 

அதேபோன்று அவரவர் கருத்துக்களை அவரவரே பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்ன கருத்துப்பட அவர் அதை கூறியுள்ளார். என்பதை அவரிடமிருந்தே நாம் தெளிவாக கேட்டுக் கொள்ளவேண்டும்.  

அவ்வாறு பெற்றுக் கொண்டு தான் என்னால் எதையும் கூற முடியும். 

அவர் இல்லாத எந்த சந்தர்ப்பத்திலும் அவரிடம் அதுபற்றி கேட்காமலும் என்னால் எதுவும்கூற முடியாது. 

அதைவிடுத்து நான் செயற்பட்டால் நான் அவருக்கும் நாட்டு மக்களுக்கும் செய்கின்ற தவறாக அது அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)   

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 06/08/2020 - 07:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை