அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார்

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன்

தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் இந்த அரசாங்கம் தயாராக இருந்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் அவ் அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் பூர்த்தியடையக் கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதை வரைவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பூரண ஆதரவைக் கொடுப்போம். அதாவது, அரசியல் அமைப்பின் நகலை வரைவதற்காக மட்டும் அது அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதல்ல எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது  ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி: அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளத் தவறினால் அதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்க தயாரா?

பதில்: நாங்கள் இந்த அரசாங்கத்தை ஏற்படுத்திய போது ஆதரவு வழங்கவில்லை. ஆனால் எமது இனப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக, நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். அரசியல் தீர்வு, எமது அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தால் நிச்சயமாக அதற்கு ஆதரவைக் கொடுப்போம்.

ஆரம்பத்தில் இருந்து, நகல் வரைபை செய்யாது கடந்த அரசில் உருவாக்கிய நகல் வரைபை வைத்தே ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோம். கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூட இதனைத் தெரிவித்திருந்தார்.

அண்மையில் பிரதமரைச் சந்தித்திருந்த போது இவ்விடயத்தை மீண்டும் அவரிடத்தில் வலியுறுத்தினேன். நீங்கள் இதய சுத்தியுடன் புதிய அரசியலைமைப் கொண்டு வருகின்றபோது அது ஜனநாயக அடிப்படையிலான அரசியல் அமைப்பாக இருக்க வேண்டும்.

அதில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் பூர்த்தியடையக் கூடிய வகையில் ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதை வரைவதற்கும், நிறைவேற்றுவதற்கும் பூரண ஆதரவைக் கொடுப்போம். அதாவது, அரசியல் அமைப்பின் நகலை வரைவதற்காக மட்டும் அது அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதல்ல.

கேள்வி: பிரதமரைச் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கலந்துரையாடியுள்ளீர்கள். தீர்வுகள் எட்டப்பட்டுள்ளனவா?

பதில்: ஜனாதிபதியுடன் பேசுமாறு பிரதமர் தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதிக்கு தகவல் கொடுத்திருந்தும் அவர் இன்னும் பேசவில்லை. பிரதமர் பேசிய போது நான் கொடுத்த தரவுகள் நீதியமைச்சுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல் கைதிகள் 96 பேரில், 84 பேரின் பெயர்கள் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபரின் சிபார்சு வந்தவுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் சொல்லியிருந்தார். தேர்தல் காலங்களில் இதை எவ்வாறு கையாள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து மிக விரைவில் அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை