தொற்று நோயின் தாக்கத்தை தணிக்க 'மொபைல் அப்'

கொவிட் - 19:

கொவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தைத் தணிப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய 'மொபைல் அப்' (கையடக்கத் தொலைபேசி) ஒன்றை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக உருவாக்கியுள்ளனர். 'சுவரக்ஷா' என்ற பெயர் கொண்ட இந்த அப் நேற்று உத்தியோகபூர்வமாக கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பீட வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பேராசிரியர் சந்தன ஜயரட்ன தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த மொபைல் அப்பை உருவாகியுள்ளனர். தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் கொவிட் - 19 தொற்று நோய்த் தடுப்பு ஆராய்ச்சிக்கான மானியத் திட்ட உதவியின் கீழ் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினர் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட இந்த அப்பை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் பேராசிரியர் ஜயரட்ன தெரிவிக்கையில், 'இந்த 'அப்' பை பொதுமக்கள் தம் கையடக்க தொலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் ஊடாக தனித்துவத்தைப் பாதுகாத்தபடி தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். சுகாதாரத்துறை அதிகாரிகள் தரவுகளைப் பதிவேற்றியதும்  பொதுமக்கள் இதன் ஊடாக எவ்வித அச்சமுமின்றி பொருளாதார மீளாய்வுகளில் ஈடுபடலாம்.

எவராவது ஒருவரை நீங்கள் பத்து மீற்றர்கள் தூரத்திற்குள் அணுகும் போது உங்களது கைடக்கத் தொலைபேசி ஒரு வகையான ஒலி சமிக்ைஞயை எழுப்பும். அதிர்வு ஏற்படும்.

நீங்கள் கொவிட் 19 தொற்று தொடர்பிலான நபரை சந்தித்தால் அதனைக் குறிக்கும் வகையில் 5 வெவ்வேறு வர்ணங்களில் கையடக்கத் தொலைபேசியின் திரையில் அறிவிப்பு வெளிப்படும். கொவிட் -19 தொற்றாளராயின் சிகப்பு நிறமும், அதிலிருந்து மீட்சி பெற்றவராயின் மஞ்சள் நிறமும், தனிமைப்படுத்தப்பட்டவராயின் கபில நிறமும், தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்தவராயின் பச்சை நிறமும் 14 முதல் 28 நாட்களுக்குள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவராயின் 'மெஜன்டா' நிறமும் வெளிப்படும்.

மேலும் வரைபடத்தின் ஊடாக நீங்கள் பயணிக்கும் இடத்தின் ஆபத்து தன்மையை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் வசதி உள்ளது. இந்த அப் பயன்பாட்டுடன் நாட்டின் சுற்றாலா துறையை மீளத்திறக்கலாம்.இது இந்நாட்டின் வருமானத்தின் 13 வீதத்தை பெற்றுத்தரும்.

மேலும் கொவிட் - 19 தொற்று சந்தேக நபர்களை அவர்களது வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களில் சுய தனிமைப்படுத்தலுக்கோ உட்படுத்துவதாயின் அதற்கு தேவையான ஜியோஃபென்சிங்க் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது. அத்தோடு இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் கடந்த 14 நாட்களில் தொடர்புபட்டவர்களைக் கண்டறியக்கூடிய வசதியும் உள்ளது. பெரும்பாலான நாடுகள் கொவிட் - 19 தொற்று பரவலை தணிக்கும் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக தங்கள் கையடக்க தொலைபேசிகளை அடிப்படையிலான பயன்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன. தனிநபர்களின் தனித்துவத்தைப் பாதுகாத்தபடி எந்தவொரு தொற்றுநோயையும் தணிக்கப் பயன்படும் பல்வேறு அம்சங்களுடன் உலகில் உருவாக்கப்பட்டுள்ள மிக மேம்பட்ட அப் இதுவாகும். இந்த அப்பின் பயன்பாட்டை உலகின் ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக இலவசமாக பெற்றுக்கொடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மர்லின் மரிக்கார்

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை