நிர்க்கதியான ரொஹிங்கியர்களை மீட்டுவந்த இந்தோனேசிய மீனவர்கள்

இந்தோனேசிய கடற்பகுதியில் நிர்க்கதியாக இருந்த சுமார் 100 ரொஹிங்கிய அகதிகளை உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளில் கரைசேர்த்துள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிர்வாகத்தினர் இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துள்ளனர்.

30 சிறுவர்கள் உட்பட பாகுபாட்டுக்கு முகம்கொடுக்கும் மியன்மார் சிறுபான்மையினரான ரொஹிங்கியர்கள் கடலில் நிர்க்கதியாக இருந்துள்ளனர். இந்தோனேசிய மாகாணமான அசேவில் லொக்சியுமாவே அதிகாரிகள் வைரஸ் அச்சுறுத்தலால் இந்த அகதிகள் தரைக்கு வருவதை தடுத்துள்ளனர்.

இந்நிலையில் கோபமடைந்த உள்ளூர் மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை தமது படகுகளை எடுத்துச் சென்று இந்த அகதிகளை கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

கடற்கரையில் கூடிய உள்ளூர் மக்கள் அவர்களை கரகோசமிட்டு வரவேற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் கடலில் நிர்க்கதியாக இருப்பது எமக்கு கவலையாக இருந்தது” என்று உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த ரொஹிங்கிய அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கு பதில் அவர்களை கடலுக்கு திருப்பி அனுப்பப்போவதாக உள்ளூர் பொலிஸ் பிரதானியான எகோ ஹர்டான்டோ தெரிவித்துள்ளார்.

Sat, 06/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை