ஆசிய பங்குச் சந்தை தொடர்ந்து ஒன்பதாவது நாளாகவும் ஏற்றம்

ஆசியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக நேற்றும் ஏற்றம் கண்டன. உலக நாடுகள் பலவற்றில் நடப்பிலிருந்த முடக்கம் தளர்த்தப்பட்டதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை உயர்ந்துள்ளது.

அதனால் எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் உலகப் பொருளாதாரம் விரைவாக மீட்சியடையக் கூடும் என்ற நம்பிக்கையும் வலுவடைந்துள்ளது.

அமெரிக்காவில் மே மாத வேலையின்மை எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதாக கடந்த வாரம் வெளியான அறிக்கை, உலகச் சந்தைகளுக்குப் புத்துயிரூட்டியது.

உலகின் பெரும்பாலான பங்குச் சந்தைகள் இப்போது கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முந்திய நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, ஹொங்கொங், அவுஸ்திரேலியா, நியூசிலாந்துப் பங்குச் சந்தைகளில், பங்கு விலை நேற்று கூடியது.

அமெரிக்க மசகு எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 1.28 டொலர் கூடி 38.68 டொலர் ஆனது. கடுமையாக வீழ்ச்சி கண்டிருந்த தங்கத்தின் விலையும் உயர ஆரம்பித்துள்ளது.

நிச்சயமற்ற உலகப் பொருளாதாரம் காரணமாக முதலீட்டாளர்கள் பலர், அதிக ஆபத்தற்ற முதலீடாகத் தங்கத்தைக் கருதுகின்றனர். ஓர் அவுன்ஸ் தங்கம், 1,697 டொலருக்கு விற்கப்படுகிறது.

 

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை