சந்தர்ப்பங்களை தவறவிட்டவர்கள் உறுதிமொழிகளுடன் மீண்டும் களத்தில்

TNA ஐ மக்கள் நிராகரித்து விட்டனர் என்கிறார் பிரபா கணேசன்

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க கூடிய சந்தர்ப்பங்களை தவறவிட்டு விட்டு தற்போது மீண்டும் சந்தர்ப்பம் கேட்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளார்கள் என சுவர் கடிகார சின்னத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியில் போட்டியிடும் வன்னி மாவட்ட பிரதான வேட்பாளர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வன்னி மாவட்டமானது யுத்தத்தால் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மக்களுக்கு தான் உண்மையிலேயே ஊழலற்ற நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதற்காக தான் நாம் களமிறங்கியுள்ளோம்.

நாம் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இளைஞர்கள், போராளிகள், கல்விச் சமூகம் எம்மோடு இணைந்துள்ளார்கள். அந்த மக்களுக்கு பாரிய அபிவிருத்தியும், அரசியல் மாற்றமும் தேவை. எனவே இவை இரண்டும் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

உரிமையை பெற்றுத் தருகின்றோம், அரசியல் மாற்றத்தை பெற்றுத் தருகின்றோம் என கடந்த காலங்களில் கூறியவர்கள் அவ்வாறான எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

குறிப்பாக வன்னியிலுள்ள பல கிராமங்களுக்கு சென்று பார்க்கும் போது அம்மக்கள் படும் அவலங்களை காணமுடிந்தது.

எனவே தேர்தல் வெற்றியின் மூலம் அமையப்போகும் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து வன்னி மக்களுக்கு சேவையாற்றக் கூடிய அமைச்சை பெற்று அவர்களுக்கு சேவையாற்றவுள்ளேன் என்றார்.

 

ரி.விரூஷன்

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை