ஆட்சியை கைப்பற்றுவதல்ல; சஜித்தின் நோக்கம் சிறிகொத்தாவே

பொதுத் தேர்தலில் சஜித் தனது அணி படுதோல்வியடைவதை நன்கு அறிந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவைக் கைப்பற்றுவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறார் என பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சில தினங்களாக சஜித் பிரேமதாஸ மக்கள் சந்திப்புகள், ஊடக சந்திப்புகளில் தேர்தல் ஒன்று நடக்கவிருப்பதை மறந்து ஐ. தே. க. தலைமையகத்தை கைப்பற்றுவது குறித்தே பேசி வருகின்றார். தமது தரப்பால் ஒருபோதும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டுள்ளார் என்பதையே இது வெளிக்காட்டுகின்றது எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் மீண்டும் சேறுபூசும் அரசியல் கலாசாரம் தொடங்கிவிட்டது. இந்த விருப்பு வாக்குமுறையால் சகோதர வேட்பாளர்களுக்கும் அடிதடி, குத்துவெட்டு நடக்கின்றது. எனவே தான் நாம் விருப்பு வாக்குத் தேர்தலை ஒழித்து விடுமாறு வலியுறுத்தி வருகின்றோம். இந்த தேர்தல் முறையை முற்றாக மாற்ற வேண்டும்.

2020 தேர்தல் முக்கியமானதாகவே நாம் பார்க்கின்றோம். காரணம் எமக்கு நேரடியாக எதிரணி எதனையும் காண முடியவில்லை. எமக்கு எதிராக களமிறக்கப்பட்டிருப்பவை நொண்டிக் குதிரைகளாகும். போட்டி போட ஒரு கட்சி இல்லாமை எமக்கு கவலை தருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை உள்ளிருந்தவர்களே பலவீனப்படுத்தி நாசமாக்கி விட்டனர். அக்கட்சியில் கட்டுப்பாடற்றவர்களும், ஒழுக்கவிழுமியங்களை பேணத் தெரியாதவர்களுமே காணப்படுகின்றனர் என்றார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை