போர் நிறுத்த காலத்திலேயே புலிகளின் பொங்கு தமிழ் மேடையில் ஏறி பேசினேன்

கருணா கூறுவது போல் அது சட்டவிரோதமானதல்ல; மனோ பதில்

போர்நிறுத்த காலத்தில் சட்ட பூர்வமாக தென்னிலங்கையிலிருந்து சென்று பொங்கு தமிழ் விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினேன். நான் ஒருபோதும் புலிகளின் மேடையில் ஏறி, தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தியோ, ஆயுத போராட்டத்தை ஆதரித்தோ பேசியதில்லை. அன்றைய காலகட்டத்தில் அது சட்டவிரோமானதாக இருக்கவில்லையென தமிழ் முற்போக்கு

கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான், முன்னாள் அமைச்சர் மனோ தொடர்பில் கூறிய கருத்துக்கு பதில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

நான் பொங்கு தமிழ் விழாவுக்குச் சென்று அந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி தனிநாட்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாக, புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர், வேட்பாளர் கருணா அம்மான் கூறியுள்ளார். இது இதற்கு முன்னர் பல சிங்கள அடிப்படைவாதிகள் என் மீது சுமத்திய குற்றச்சாட்டு தான். இப்போது புதிதாக நண்பர் கருணாவும் சொல்கிறார் அவ்வளவுதான். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், முன்னாள் எம்.பி அடைக்கலநாதன் ஆகியோர் தொடர்பிலும், கருணா அம்மான் இப்படியே குற்றம் சாட்டுகிறார். அவர்களைபற்றி நான் பேசப்போவதில்லை. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என எண்ணுகிறேன். நான் என்னை பற்றிய கருத்துகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, என்னைப்பற்றி பொய் சொல்லத் தேவை கருணாவுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே, நண்பர் கருணா அம்மான் என்னைப்பற்றி விளக்கமில்லாமல் பேசுகிறார் என நினைக்கிறேன் 

உண்மையில் புலிகளின் மேடையில் ஏறி நான் என்ன பேசினேன்? 'இந்நாட்டிலே சிங்கள தேசியமும், தமிழ் தேசியமும் இணைந்து ஒரே வட்டத்திற்குள்ளே வாழ்வதற்கு இன்னமும் இடம் இருக்கின்றது. ஆனால் ஒரே நிபந்தனையாக இரண்டுக்கும் இடையில் சமத்துவம் நிலவ வேண்டும்'இதுவே எனது பேச்சின் சாராம்சமாக இருந்தது.  அதுவும் தமிழில் பேசியிருக்கிறேன். 

இதை புரிந்துகொள்ளக்கூடிய சிங்கள அரசியல்வாதிகள் இருப்பார்களேயானால், உண்மையிலேயே அவர்கள் எனக்கு தேச அபிமானி பட்டம் வழங்கி, இராமநாதனை வண்டியில் ஏற்றி இழுத்து சென்றதை போல, என்னையும் கௌரவபடுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் இங்குள்ள சிலர் எனது பேச்சை திரிபுபடுத்தி எனக்கு இனவாத சேறு பூசினார்கள். இப்போது அதையே தமிழ் மொழியில் நான் பேசுவதை புரிந்துகொள்ள கூடிய கருணா அம்மானும் செய்கிறார்.

Sun, 06/28/2020 - 08:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை