பதற்றத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதாக டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவில் பொலிஸாரின் பிடியில் கறுப்பினத்தவர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் பதற்ற சூழலை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பது பற்றி அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் நகரங்கள் அர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தி தமது குடிமக்களை பாதுகாக்காவிட்டால் இராணுவத்தை அனுப்பி பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜோர்ஜ் ப்லொயிட் என்பவரின் மரணமே ஆர்ப்பாட்டங்களை தூண்டியது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் மிசுரியில் நான்கு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு சிக்காகோவில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் டஜன் கணக்கான பிரதான நகரங்களில் திங்கட்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. நியூயோர்க் நகர் நேற்று முடக்க நிலையில் இருந்ததோடு வொசிங்டனில் மேலும் இரு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கின் பிரபலமான மாசிஸ் கடைத்தொகுதி உடைக்கப்பட்டு நைக்கி கடை சூறையாடப்பட்டுள்ளது. ஏனைய கடைகள் மற்றும் வங்கிகளின் முன் வாயில்கள் மற்றும் கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

46 வயதான ப்ளொயிட் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது காலால் அவரது கழுத்தை தொடர்ச்சியாக நெருக்கிக் கொண்டிருந்ததை அடுத்து அவர் உயிரிழந்த வீடியோ ஒன்று வெளியானது. அதனை அடுத்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

இவ்வாறு கழுத்தை நெருக்கிய பொலிஸ் அதிகாரி டெரெக் ஹொவின் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவருடன் சம்பவ இடத்தில் இருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோர்ஜ் ப்ளொயிட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரபூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையின பொலிஸாரினால் கொல்லப்படும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே ப்ளொயிட்டின் மரணம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெள்ளை மாளிகைளின் ரோஸ் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை பேசிய டிரம்ப், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் நேரம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.

“ஓர் ஜனாதிபதியாக அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. அமெரிக்க வீதிகளில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இராணுவம் அனுப்பப்படும்” என்றார்.

கலவரம், கொள்ளை, தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களை அழிப்பதை நிறுத்தவும், சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இராணுவம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பயன்படுத்தத் தயார் என டிரம்ப் கூறினார்.

பல மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் தங்களது குடிமக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டன எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகில் நடந்த கலவரம் மிகவும் அவமானகரமானது என கூறிய டிரம்ப், அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது என்றார்.

மக்களிடம் உரையாடிய பின்னர் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதில் சற்று சேதமடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயிண்ட் ஜோன் தேவாலயத்திற்கு டிரம்ப் நடந்தே சென்றார்.

தேவாலயத்திற்கு வெளியே கையில் பைபிளை வைத்திருந்தபடி பேசிய டிரம்ப், “நமது நாடு உலகின் சிறந்த நாடு. நான் அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்போகிறேன்” எனக் கூறினார்.

எவ்வாறாயினும் ஏழாவது நாளாகவும் அமெரிக்காவில் 75க்கும் அதிகமான நகரங்களில் கடந்த திங்கட்கிழமை இரவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனால் 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.

இரவு நேர ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். மான்ஹட்டனில் கடைகள் சூறையாடப்பட்டு வன்முறை வெடித்ததை அடுத்து பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓக்லாண்ட் உட்பட ஏனைய நகரங்களில் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன. மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் ஜோர்ஜ் ப்ளொயிட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.

Wed, 06/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை