எத்தரப்பிற்கும் பாதிப்பில்லாது அரசியலமைப்பில் திருத்தம்

சமஷ்டி உள்ளடங்காத வகையில் தமிழருக்கு எதிர்பார்த்தவாறு தீர்வு

ஆளும் கட்சி சார்பில்  முன்னாள் அமைச்சர்  யாப்பா தெரிவிப்பு

சமஷ்டியாட்சியின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பிற்கும் பாதிப்பில்லாத வகையிலும் புதிய அரசாங்கம் அரசியலமைப்பை திருத்தம் செய்யும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு அரசியல் நோக்கங்களை பின்னணியாக கொண்டிராத வகையில் வழங்கப்படும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தினால் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடும் தோற்றம் பெறாது என்பதே அரசாங்கத்தின் கொள்கை.வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க தமிழ் கூட்டமைப்பு காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் அனைத்து மக்களையும் சமமாகவே நோக்குவதாகவும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  தமது அரசியல் சுயலாபத்திற்காக தமிழ், முஸ்லில் அரசியல்வாதிகள் , ராஷபக்‌ஷ ஆட்சி தொடர்பில் சிறுபான்மை மக்களிடையே தவறாக சித்தரித்தார்கள். ஆனால் தவறான அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து தமிழ், முஸ்லிம் மக்கள் விடுபட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்

சிறுபான்மை வாக்குகளின்றி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி தேர்தலில் மாற்றிவிட்டோம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெருவெற்றியீட்ட உள்ள நிலையில் தமிழ், முஸ்லிம் மக்களும் இதில் பங்காளிகளாக இணைய வேண்டும்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களுக்கு ஜனாதிபதியுடன் இணைந்து பயணிப்பதற்கான அவகாசம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். சுகாதாரத் தரப்பு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி நீதியான தேர்தல் பிரசாரங்களை நடத்த எதிர்பார்க்கிறோம். தேர்தல் ஆணைக்குழுவின் ஒழுங்குவிதிகள் மற்றும் சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைய இதனை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.

ஐ.தே.க பல துண்டுகளாக உடைந்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ளவர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து வருகின்றனர். முன்பிருந்த நிலை மாறி வருகிறது.

முறையாக தேர்தல் நடத்தப்பட்டு பலமான பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும்.சிறந்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

கட்டுக்கோப்போடு ஜனாதிபதி நாட்டை நிர்வகித்து வருகிறார். ஒழுகக் கட்டுப்பாடுள்ள பாராளுமன்றமும் அடிமட்ட மக்கள் பற்றி சிந்திக்கும் நபர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகள் தாக்கப்படும் என்றார்கள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் யாவும் பொய்யாகியுள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பை திருத்தம் செய்யும் வாக்குறுதிக்கு அமையவே தமிழ் கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசை ஆதரித்தது.நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி தீர்வு தொடர்பிலே அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி நாட்டை துண்டாடுவதற்கே நாம் எதிராக இருந்தோம் என்றார்.(பா)

 ஷம்ஸ் பாஹிம

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை