அரச வங்கிகளின் நேரடி பங்களிப்பு மிக அவசியம்

நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப

வங்கி தலைவர்களுக்கு ஜனாதிபதி கண்டிப்பான அறிவுறுத்தல்

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின் பொறுப்பாகும். அதனை விளங்கி பொருளாதாரத்தை செயற்திறனாக பேணுவதற்கான மூலோபாயத்தை முன்கொண்டு செல்வது வங்கிகளின் முக்கிய பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியின் செயலாற்றுகை மீளாய்வு தொடர்பான கூட்டமொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

கடனுக்காக 02 இலக்க வட்டியை அறவிடுவதன் மூலம் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதனை ஒரு தனி இலக்க குறைந்த பெறுமானத்திற்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

தனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது தனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் தான் வங்கிகளுக்கு கூறவில்லை.

விவசாயிகள் முதல் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரச வங்கிகள் முன்னணியில் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

உலகின் எந்தவொரு நாடும் இத்தகைய நெருக்கடிக்கு இதுவரையில் முகங்கொடுக்கவில்லை. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பழைய முறைமைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பாரம்பரிய முறைமைகளின் ஊடாக மட்டும் செய்ய முடியாதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை. அது ஒருபோதும் அரசியலுக்காகவன்றி நாட்டுக்கானதாகும். அதற்கு தடையாக இருந்தால் பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 07% வீதத்திற்கும் 08% வீதத்திற்கும் இடையிலிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 2019ஆம் ஆண்டாகும்போது 02% வீதத்தைப் பார்க்கிலும் வீழ்ச்சியடைந்தது. கொவிட் -19 நோய் தொற்றுடன் வீழ்ச்சியடைந்த உலக பொருளாதார சூழலில் அது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் விளங்கிக்கொண்டு நாட்டின் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவது அரச வங்கிகளின் பொறுப்பாகும் என்றார். 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை