ஜனாதிபதியின் தீர்மானத்தை உறுதிப்படுத்திய தீர்ப்பு

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததும் பொது நிதியை பயன்படுத்தியதும்  சரியானதெனவும் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினூடாக தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் ஒத்திவைக்கப்பட்ட போது நீதிமன்றத்தை நாடாத எதிரணி, பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகையில் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதாக குறிப்பிட்ட அவர், இந்த தீர்ப்பிற்கமைய துரிதமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தினகரனுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

எதிர்த் தரப்பினரும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் தாக்கல் செய்திருந்த 08 மனுக்கள் மீது 10 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தை கலைத்தது தவறு என்றும் அது தொடர்பான ஜனாதிபதியின் வர்த்தமானியை இரத்து செய்யுமாறும் பழைய பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறும்  ஜனாதிபதிக்கு  பாராளுமன்ற அனுமதியின்றி  நிதி செலவிட முடியாது என்று அறிவிக்குமாறும் இந்த மனுக்களினூடாக கோரப்பட்டிருந்தது. ஆனால் நீதியரசர் குழாம் அனைத்து மனுக்களையும் ஏகமனதாக இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பினூடாக 4 1/2 வருடத்தின் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சரியானது என்றும் பாராளுமன்றம் கலைத்து 03 மாத காலத்தினுள் தேர்தல் நடத்துவது கட்டாயமல்ல என்றும்  பழைய பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என்றும் பொதுநிதியை ஜனாதிபதி பயன்படுத்தியதில் தவறில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இருவருடங்களாக உள்ளூராட்சி சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 03 வருடங்களாக மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் இதற்காக இவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை.அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த தயாராகையில் அதனை நிறுத்துமாறு கோரி நீதிமன்றம் சென்றனர்.

இதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் ஒத்துழைத்தது.

தேர்தலை பின்போடுவது தேர்தல் ஆணைக்குழுவின் பணியல்ல. இந்த தீர்ப்புடன் தேர்தலை துரிதமாக நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். (பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 06/03/2020 - 07:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை