மாலிங்கவே சிறந்த யோர்க்கர்

பந்துவீச்சாளர் - பும்ரா

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த யோர்க்கர் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தான் என இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பும்ரா, யோர்க்கர் போடுவதில் அண்மைக்காலமாக சிறப்பானவராக கருதப்படுகிறார். அத்துடன், தற்போதைய ஐசிசி தரவரிசையிலும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உள்ள அவருக்கு ஆரம்ப காலத்தில் லசித் மாலிங்க நிறைய உதவி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் மாலிங்க குறித்த பும்ராவின் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், பும்ரா மற்றும் மாலிங்க இணைந்துள்ள புகைப்படத்தையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பும்ரா கூறுகையில், ”லசித் மாலிங்க தான் உலகின் மிகச்சிறந்த யோர்க்கர் பந்துவீச்சாளர். அவருடன் நீண்ட நாட்கள் சேர்ந்து விளையாடியது எனக்கு சாதகமான விடயமாக அமைந்தது. மும்பை அணிக்காக விளையாடிய போது மாலிங்க எப்பொழுதும் எனக்கு உதவி செய்வார்” எனக் குறிப்பிட்டார்.

லசித் மாலிங்க நீண்ட காலமாக யோர்க்கர் பந்து வீசுவதில் சிறந்து விளங்குவதாகவும், அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் பும்ரா மேலும் கூறியுள்ளார்.

அந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு பகிர்வில், ”வாரத்தின் ஆறு நாட்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்படி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருப்பது எந்தளவு கைகொடுக்கும் என தெரியவில்லை. அதனால் இந்த இடைவேளைக்கு பின் பந்துவீசும் போது, என் உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை.

கிரிக்கெட் மீண்டும் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரியவில்லை.

ஆனால் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு நிச்சயமாக மாற்றுவழி இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பந்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல்” என தெரிவித்தார்.

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை