Header Ads

இனவெறிக்கு எதிராக உலகெங்கும் வலுக்கும் போராட்டம்

அடிமை வர்த்தகர் சிலை உடைப்பு

அமெரிக்காவில் ஆரம்பமான இனவெறிக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய நாடுகளைத் தாண்டி பிரேசில், அவுஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. லண்டனில் 125 ஆண்டுகால சிலையை போராட்டக்காரர்கள் உடைத்து ஆற்றில் வீசி எறிந்தனர்.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் ப்ளொயிட் என்பவரை பொலிஸார் கழுத்தில் மிதித்துக் கொன்றதைத் தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்தனர். இதனால் பொலிஸார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதலும், வன்முறையும் நடந்து வருகிறது.

ஜோர்ஜ் ப்ளொயிட் மரணத்திற்கு நீதி கேட்டு வொஷிங்டன், நியூயோர்க், அட்லாண்டா, பிலடெல்பியா, சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, பொஸ்டன், மியாமி உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்திலும் நிறவெறிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. லண்டனில் உள்ள முன்னாள் பிரதமர் வின்ஸ்டன்ட் சர்ச்சிலின் நினைவுச் சின்னம் மீது இனவெறி என்று போராட்டக்காரர்கள் எழுதிவைத்தனர். அங்குள்ள காந்தி மற்றும் ஆப்ரஹாம் லிங்கன் சிலைகளிலும் இனவெறிக்கு எதிரான பதாகைகள் வைக்கப்பட்டன.

இங்கிலாந்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அடிமை வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தவருமான எட்வர்ட் கால்ஸ்டனின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர் அவரது சிலையை போராட்டக்காரர்கள் ஆற்றில் தூக்கி வீசினர்.

18 அடி உயர வெண்கலச் சிலையை கயிறு கட்டி கீழே தள்ளி, துறைமுகத்திற்கு உருட்டிச் சென்று ஆற்றில் தள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கால்ஸ்டன் உறுப்பினராக இருந்த ரோயல் ஆபிரிக்க கம்பனி சுமார் 80,000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களை ஆபிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளது.

லண்டன் பேரணியில் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பொலிஸார் மீது கற்கள் வீசப்பட்டன.

இதன் காரணமாக போராட்டக்காரர்களை பொலிஸார் தடியடி நடத்தி விரட்டினர்.

பொலிஸ் தாக்குதலில் கறுப்பின நபர் ஜோர்ஜ் ப்ளொயிட் உயிரிழந்ததைக் கண்டித்து ஹொங்கொங்கில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் கொட்டும் மழைக்கு இடையே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் கொரிய தலைநகர் சியோலில் இனவெறி மற்றும் பொலிஸின் கண்மூடித்தனமாக தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பேரணி சென்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் கலவரம் மூண்டது.

நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிராக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வீதிகளில் திரண்ட அவர்கள் நிறவெறிக்கு எதிராக பதாகைகளை கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர்.

அவுஸ்திரேலியாவில் ஒன்றிணைந்த மக்கள் அங்குள்ள பூங்காவில் முழங்காலிட்டு போராட்டம் நடத்தினர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்த பொலிஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இத்தாலியத் தலைநகர் ரோமில் ப்ளொயிட்டுக்கு 8 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஒருமித்த குரலில், ‘எங்களால் மூச்சுவிட முடியவில்லை’ என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான பேராட்டம் அமெரிக்கக் கண்டத்தில் ஆரம்பித்து தற்போது, ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என 5 கண்டங்களிலும் வெடித்துப் பரவி உள்ளது.

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.