இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வருபவர்களால் வடக்கில் கொரோனா ஆபத்து

தொற்று ஏற்பட்டால் கட்டுப்படுத்த ஏற்பாடுகள் தயார் நிலையில்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இலங்கை வருகைதரும் வர்த்தகர்களால் கொரோனா ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வடக்கில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் என சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து முன்னாய்த்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஆ.கேதிஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வெகுவிரைவில் ஏற்படும் எனவும், அது வடமாகணத்திலிருந்தே ஆரம்பிக்கும் எனவும் சுகாதார பிரிவு எச்சரித்திருந்தது.

குறிப்பாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வருகைதரும் வர்த்தகர்களாலேயே இந் நிலை ஏற்படும் எனவும் அப் பிரிவு குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் வடக்கில் கொரோனா பரவலின் இரண்டாவது நிலை தொடர்பாகவும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்துக்குள் சட்டவிரோதமாக வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும் கொரோனா தாக்கம் ஏற்படுமாக இருந்தால் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதுக்கு தேவையான அனைத்து முன்னாய்த்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

அண்மையில் மன்னார் பகுதிக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இருவர் வந்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களை அழைத்து வந்தவர்களையும் நாம் தனிமைப்படுத்தியிருந்தோம். இவ்வாறு கொரோனா பரவல் அச்சுறுத்தல் காணப்பட்டால் அதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மேலும் இலங்கை இந்திய கடற்பரப்பில் கடற்படையின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருவது தொடர்பாக தொடர்ச்சியாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

ரி.விரூஷன்

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை