நேபாளத்தின் புதிய வரைபடம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

இந்தியா கடுமையாக எதிர்க்கும்:

இந்தியாவின் கண்டனத்தை மீறி, சர்ச்சைக்குரிய புதிய வரைபட சட்டத்திருத்த சட்டமூலம் நேபாள பாராளுமன்ற கீழவையை தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய உரிமை கொண்டாடும் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமான பகுதியாக நேபாளம் கூறி வருகிறது.

இப்பகுதிகளை உள்ளடக்கிய வரைபட புதிய சட்டமூலம் தயாரித்து, நேபாள பாராளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு அரசு அண்மையில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் நேபாள பாராளுமன்ற மேலவைக்கு அந்த சட்டமூலம் அனுப்பப்பட்டது. அந்த சபையிலும் சட்டமூலம் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையில் இருந்த 57 எம்.பிக்களும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். யாரும் சட்டமூலத்தை எதிர்க்கவோ அல்லது சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்கவோ இல்லை.

இந்த செயற்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா எல்லையை ஒட்டி இருக்கும் லிபுலெக்கில் 80 கி.மீ பாதை ஒன்றை இந்தியா கடந்த மாதம் ஆரம்பித்து வைத்த நிலையிலேயே முறுகல் தீவிரம் அடைந்தது. இந்தப் பாதை தமது நாட்டின் ஊடாகச் செல்வதாக நோபளம் எதிர்ப்பு வெளியிட்டது. இந்தப் பாதை நாட்டின் இறைமையை மீறுவதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் கியாவாலி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேபாளத்தின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் அது சட்டமாக அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை