நியூஸிலாந்தின் ரேச்சல் ப்ரீஸ்ட்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும்

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு வீராங்கனை ரேச்சல் ப்ரீஸ்ட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கான 2020-2021 ஒப்பந்தம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னாள் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பட்டியலில் இருந்து ரேச்சல் ப்ரீஸ்ட் நீக்கப்பட்டிருந்தார். 34 வயதான அவர், கடந்த ஒப்பந்தத்தில், மீள அழைக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் நீக்கப்பட்டார்.

ரேச்சல் ப்ரீஸ்ட் கடந்த 13 வருடங்களாக நியூஸிலாந்து மகளிர் அணிக்காக 87 ஒருநாள் மற்றும் 75 ரி 20 போட்டிகளில் விளையாடி முறையே 1674 மற்றும் 873 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

தனது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்ட ரேச்சல் ப்ரீஸ்ட், “13 வருடங்களாக நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடியமை மகிழ்ச்சியளிக்கும் விடயம். இதேநேரம், நான் இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவுசெய்துள்ளேன்.

கிரிக்கெட்டிலிருந்து நகரவேண்டிய வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கான நேரம் இது. அத்துடன், இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எனக்கு செல்லினிடமிருந்து (ப்ரிக்ஸ்) அழைப்பொன்று கிடைத்தது. குறித்த குழாமில் இணைவது எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். குறித்த அழைப்பு எனக்கு வரும் என நான் சிந்தித்திருக்கவில்லை. இதுவொரு மிகச்சிறந்த வாய்ப்பு, புதிய குழுவுடன், புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த தொடரானது உலகின் மிகச்சிறந்த உள்ளூர் தொடர்களில் ஒன்று. அதனால்தான் நான் அதில் இணைய முடிவெடுத்துள்ளேன். இதுவொரு மெய்சிலிர்க்க வைக்கும் வாய்ப்பு. அந்த வாய்ப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். நான் இனி இந்த பருவகாலத்தில் விளையாடுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை